அரசு பண்ணையில் ரூ.5க்கு ரோஜா செடி மானிய விலையில் பழக்கன்றுகள்
மேலூர் அருகே அரசு பண்ணையில் அலங்கார பூச்செடிகள் ரூ. 5க்கும், ஒட்டு ரக வீரிய பழக்கன்றுகள் ரூ.20க்கும் மானியத்தில் கிடைக்கிறது. ''ஏக்கர் கணக்கில் பழக்கன்றுகளை நடவு செய்ய விரும்புவர்களும் இப்பண்ணையை அணுகலாம்,'' என அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலூர் பூஞ்சுத்தியில் சமுதாய நாற்றங்கால் பண்ணை 15 ஆண்டுகளாக செயல்படுகிறது. இவ்விடத்தை தோட்டக்கலை துறை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தன் வசப்படுத்தி, அரசு பண்ணை அமைத்தது. மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஒரே பண்ணையின் அலுவலராக பிரபா மற்றும் உதவியாளர்கள் உள்ளனர். 15 ஏக்கர் பரப்பளவில் ஒட்டு ரக மா, நெல்லி, எலுமிச்சை, கொய்யா, சப்போட்டா கன்றுகளும், சவுக்கு, தேக்கு மரக்கன்றுகளும், ரோஜா, அரளி உட்பட அலங்கார பூச்செடிகள், மூலிகை செடிகள் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.உதவி வேளாண் அலுவலர் நாகராஜன் கூறியதாவது: இங்கு பழக்கன்றுகளை விதை போட்டு உற்பத்தி செய்து, செடி பென்சில் அளவு வளர்ந்த உடன் உயர்ரக மரக்கன்றுடன் சேர்த்து பிளாஸ்டிக் கவர் மூலம் கட்டி விடுவோம். கீழ் செடியில் வளரும் சிம்புகளை தொடர்ந்து உதிர்த்துவிட்டு, ஒட்டு சேர்த்த மேல் பகுதியை மட்டும் வளர விடுவோம். இதனால் இது மரமாகி காய்க்கும் போது அதிக பலனை குறைந்த காலத்திலேயே கொடுக்கும். இப் பணியை தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் மட்டுமே செய்ய முடியும். தருமபுரியில் இருந்து வரும் நபர்கள் இப்பணியை இங்கு செய்கின்றனர். அவர்களுக்கு செடி ஒன்றுக்கு ரூ.2.50 கூலியாக தருகிறோம். நெல்லி, சப்போட்டா, எலுமிச்சை போன்ற பழ மரக் கன்றுகளை ஏக்கருக்கு 100 வரை நடவு செய்யலாம். மா மரக்கன்றுகளை ஏக்கருக்கு 40 மட்டும் நடவு செய்ய வேண்டும். 5 மீட்டர் இடைவெளியில் கன்றுகளை நடவு செய்ய வேண்டும். ஒரே ஆண்டில் பூத்து காய்த்துவிடும். அவற்றை உதிர்த்து விட்டு, மறு ஆண்டு முதல் பலனை எடுக்கலாம்.அரசு பண்ணையில், இந்த ஆண்டு ஒரு லட்சம் மரக் கன்றுகளை உற்பத்தி செய்வதாக இலக்கு நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது, என்றார். வயலில் மரக்கன்றுகளை நடவு செய்யவோ, பூச்செடிகள் வாங்கவோ விரும்புகிறவர்கள் 98941 05744, 97866 16518ல் தொடர்பு கொள்ளலாம்.