உள்ளூர் செய்திகள்

மகசூல் இழப்பை தடுக்க நெல் வயலில் கரைசல்

நெல் வயலில் பாசிகளை கட்டுப்படுத்தி, மகசூல் இழப்பை தடுப்பது குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திரூர் நெல் ஆராய்ச்சி மைய உழவியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் சு.ம.சுரேஷ்குமார் கூறியதாவது: நெல் நாற்று நடவு செய்த வயலில், பசுமை போர்வை போல பாசி படர்ந்திருக்கும். இது நெற்பயிரின் காற்றோட்டத்தை முற்றிலும் தடை ஏற்படுத்தும். நெற்பயிருக்கு போடும் தழைச்சத்தை உறிஞ்சி, வேரின் வளர்ச்சியை தடுக்கும். நெற்பயிர், மஞ்சள் நிறமாக மாறிவிடும், மகசூல் இழப்பு ஏற்படுத்தும். இதை தவிர்க்க, பாசன கால்வாய், வரப்புகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும். வயலில் அதிக தண்ணீரை தேக்குவதை தவிர்க்க வேண்டும். தண்ணீரை சிக்கனமாக பாசனத்திற்கு பயன்படுத்த வேண்டும். நடவு செய்யவிருக்கும் வயலை உழவு செய்யும் போது, 15 செ.மீ., ஆழத்தில் பாசிகள் மண்ணில் புதைக்கும் அளவிற்கு உழவு ஓட்ட வேண்டும். அசோலா, பசுந்தாள் உரம் சாகுபடி செய்யலாம். கோடை உழவு ஓட்டி மண்ணை பதப்படுத்தலாம். ஒரு ஏக்கருக்கு, காப்பர் சல்பேட் என அழைக்கப்படும் 5 கிலோ மயில் துத்தநாகம், 10 கிலோ மணலுடன் கலந்து, நீர் பாசனம் செய்யும் வாய் மடையில் வைக்கலாம். ஐந்து கிராம் மயில் துத்தநாக கரைசலை, ஒரு லிட்டர் நீரில் கலந்து, நடவு செய்த நாளில் இருந்து, 10 நாள் இடைவெளியில் தெளிக்கலாம். இதுபோல செய்யும் போது வயலில் தேங்கும் பாசிகளை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார். - முனைவர் சு.ம.சுரேஷ்குமார் 94432 92203.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !