லாபம் தரும் கீரை விவசாயம்
விவசாயத்தில் நெல், சோளம், கரும்பு போன்றவை இருந்தாலும், காய்கறிகளும் தவிர்க்க முடியாதது. சிறுவர்கள், கர்ப்பிணி பெண்கள் உட்பட அனைவருக்கும் தேவையான சத்தான உணவாக கீரை உள்ளது. இவை ஏழை முதல் பணக்காரர்கள் வரை எளிதில் வாங்கும் வகையில் மலிவான விலைகளில் கிடைக்கிறது. இதனால் கீரைகள், வீடுகளில் உணவு வகைகளில் தற்போது தவறாமல் இடம் பிடிக்கிறது. இதை விவசாயம் செய்பவர்களின் எண்ணிக்கையும் மிக குறைவு. தொடர் வறட்சியால் கண்மாய்கள், கிணறுகளில் தண்ணீர் இல்லாததால் பலர் விவசாயம் செய்வதையே விட்டு விட்டு வேறு வேலைக்கு சென்று விடுகின்றனர்.25 ஆண்டு காலமாக கீரை விவசாயத்தில் சாதனை படைத்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அத்திக்குளத்தை சேர்ந்த குடும்பத்தினர்.பவுன் ராஜன் கூறியதாவது,'' எனது தந்தை காலம் முதல் கீரை விவசாயம் செய்து வருகிறோம். அரைக்கீரை, பொன்னாங்கன்னி, பசலிக்கீரை, பாலக்கீரை போன்றவைகளை விவசாயம் செய்கிறோம். அரைக்கீரையை 25 சென்டில் விதைத்துள்ளேன். 12 நாளுக்கு ஒரு முறை 30 கிலோ முதல் 40 கிலோ வரை கிடைக்கும். பொன்னாங்கண்ணி கீரையை மாதத்திற்கு ஒரு அறுவடை செய்கிறோம். ஒரு முறை விதைத்தால் ஆண்டுக்கு 500 கிலோ வரை கீரை கிடைக்கும்.சிவகாசி, ராஜபாளையம் வியாபாரிகள் கிலோ 15 ரூபாய்க்கு வாங்கி செல்கின்றனர். மழை இல்லாததால் கிணற்றில் இருக்கும் சிறிதளவு நீரை கொண்டு விவசாயம் செய்வதால், விவசாயம் செய்யும் பரப்பை குறைத்துள்ளோம். கீரை வளர்ப்பிற்கு மாடு, ஆடு சாணம், ரசாயன உரங்களை பயன்படுத்துகிறோம். விவசாயத்தில் எங்களது குடும்பத்தினர் அனைவரும் ஈடுபட்டு வருவதால் அதிக செலவில்லாமல், நல்ல வரு மானம் கிடைக்கிறது. மிகவும் சத்துள்ள இந்த கீரை விவசாயத்திற்கு தோட்டக்கலைத்துறை சார்பில் எவ்வித மானியம் இல்லாதது வேதனையளிக்கிறது ,'' என்றார்.இவரை 93624 44948 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.ஸ்ரீவில்லிபுத்தூர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மாரிமுத்து,'' கீரைக்கு ஆண்டு முழுவதும் மார்க்கெட் உண்டு. நல்ல விலையும் கிடைக்கிறது. கீரை பாத்திகளின் மேல் பச்சை வலைகளை போட்டு பராமரித்தால் வறட்சியிலும் நல்ல மகசூல் கிடைக்கும்,'' என்றார். -ஆர்.வி.ராமநாதன், ஸ்ரீவில்லிபுத்தூர்