உள்ளூர் செய்திகள்

காலத்தில் கைகொடுத்த தர்பூசணி சாகுபடி

சாகுபடி பட்டம்:

தர்பூசணி சாகுபடிக்கு ஜனவரி - மார்ச் சிறந்த பட்டம். இந்த பட்டத்தில் அனைவராலும் எளிதில் சாகுபடி செய்துவிடலாம். இதில் வியாபார பிரச்னை கிடையாது. திறமையான விவசாயிகள் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களிலும் தர்பூசணி சாகுபடி செய்கிறார்கள். இதற்கு நிழல் வலை, நிலப்போர்வை முறைகளை பின்பற்ற வேண்டும்.

விதை:

ஒட்டு வீரிய ரகங்கள் எஸ்பிடபிள்யூ10 மார்க்கெட்டில் புழக்கத்தில் உள்ளது. ஒரு ஏக்கருக்கு 500 கிராம் விதைகள் தேவை. விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகள்தான் விற்பனைக்கு வருகின்றது. தனது அனுபவத்தில் எஸ்பிடபிள்யூ10 என்ற ரகம் மிகச்சிறந்தது என்கிறார் வேளாண் வித்தகர் ஆர்.பாண்டியன் (131-132, செஞ்சி ரோடு, திண்டிவனம் -604 001, 98423 23075).

தொழு உரம்:

ஆட்டு எரு அவ்வருடம், மாட்டு எரு மறு வருடம் என்பது பழமொழி. ரசாயன உரங்கள் அளித்தாலும் அவற்றை எடுத்து கொடுக்க தொழு உரம் போன்ற இயற்கை உரங்கள் அவசியம் தேவை. ரசாயன உரம் என்றால் 48:24:24 என்ற விகித அளவில் தழை:மணி:சாம்பல் அளிக்க வேண்டும். தழைச்சத்தை நான்கு முறையாக மேல் உரத்தில் அளிக்க வேண்டும். மணி:சாம்பல் அடி உரமாக அளிக்க வேண்டும்.

பார்சால் முறை:

பார்கள் அமைத்து பார்களின் இரு கரைகளிலும் இரண்டு அடி இடைவெளியில் செடிகள் இருக்கும் வகையில் விதைப்பு செய்யலாம். குழிமுறை, பழைய முறை. இதில் ஆறு அடி இடைவெளி விட்டு குழிக்கு ஆறு விதை வீதம் நடவு செய்யலாம். விதைப்பு அன்று அவசியம் வயலை சுற்றி கார்போ ப்யூரிடான் அல்லது போரேட் பூச்சிக் கொல்லி மருந்தை வயலை சுற்றி போடவேண்டும். அப்போதுதான் விதைப்பு செய்தவுடன் விதையில் உள்ள இனிப்பு சத்தால் கவரப்பட்டு, அணில் விதைகளை அப்படியே உரித்து சாப்பிட்டுவிடும். இதை எளிதாக கட்டுப்படுத்ததான் மேலே சொன்ன முறையை பின்பற்ற வேண்டும்.

முளைப்பு:

ஐந்து முதல் ஏழு நாட்களுக்குள் விதைகள் முளைத்துவிடும். 15 நாள் வரை உயிர் தண்ணீர் சிறிது சிறிதாக ஊற்ற வேண்டும். பின்னர் நிலத்தின் தன்மைக்கு ஏற்ப பாய்ச்சலும் காய்ச்சலும் முறையில் நீர் நிர்வாகம் செய்ய வேண்டும்.

பயிர் பாதுகாப்பு:

முதல் 15 நாட்கள் வரை சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் இருக்கும். இதைக் கட்டுப்படுத்த மித்தைல் டெமட்டான் பூச்சிக்கொல்லி 300 மில்லி + வேப்ப எண்ணெய் 500 மில்லி கலந்து தெளித்து பூச்சிகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். 30 நாட்கள் இருக்கும்போது குயினால் பாஸ் 500 மில்லி, கார்பண்டிசம் 200 கிராம் நோய் மருந்து தெளிக்க வேண்டும். பயிர் ஊக்கி ஜிப்ரலிக் அமிலம் தெளிக்கலாம். வயது 70 நாட்கள் பயிர் என்பதால் இதுபோன்ற பூஸ்டர் திரவங்கள் தெளிப்பதால்தான் மகசூல் அதிகரிக்க முடியும்.

நுனி கிள்ளுதல்:

சில விவசாயிகள் ஒரு செடிக்கு இரண்டு காய்கள் வீதம் விட்ட பின்னர் 50 நாட்கள் மேல் வரும் பிஞ்சுகளை அகற்றுகின்றனர். அதனால் மகசூல் கூடுதலாக கிடைக்கின்றது.

வீரிய ரகம்:

அர்காமானிக் 10 வருடங்களுக்கு முன்னால் வந்தது. அது தற்போது மார்க்கெட்டில் இல்லை. வீரிய ரகம் அனைத்தும் 5000 கி.மீ. தூரம் எட்டு நாட்கள் பயணம் செய்யும் வகையில் ஒரு அங்குலம் சதைப்பற்று கொண்டது. அதனால் வியாபாரிகள் 15 நாட்கள் வைத்திருந்து விற்பனை செய்யலாம். விவசாயிகளும் சற்று விலையைப் பார்த்து விற்பனை செய்யலாம். அறுவடை வயது பொதுவாக 70 நாட்களில் அனைத்து ரகங்களும் அறுவடைக்கு வந்துவிடும்.

அறுவடை:

செடிகளின் இலைகள் மஞ்சள் நிறம் மாறுதல், காய்களை தட்டிப்பார்த்தால் மத்தளம் போன்ற ஒலி கேட்கும். அதை வைத்தும் அறுவடை செய்யலாம்.-எஸ்.எஸ்.நாகராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !