நீல குட்டை அவரைக்காயில் அதிக வருவாய் ஈட்டலாம்
சேலம் நீல குட்டை ரக அவரைக்காய் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம் வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி விவசாயி பி.குகன் கூறியதாவது: காய்கறி, கீரை உள்ளிட்ட பலவித காய்கறிகளை ரசாயன உரமின்றி விளைவித்து வருகிறேன். வீட்டிற்கு தேவையான காய்கறிகளை எடுத்துக் கொண்டு, மீதமுள்ள காய்கறிகளை விற்பனை செய்து விடுகிறேன். மணல் கலந்த களிமண் நிலத்தில், பலவித அவரைக்காய் ரகங்களை சாகுபடி செய்து வருகிறேன். இதில், சேலம் நீல குட்டை ரக அவரைக்காய் நன்றாக வளர்கிறது.குறிப்பாக, மற்ற ரக அவரைக்காயை காட்டிலும், சேலம் நீல குட்டை ரக அவரைக்காய் கொத்து கொத்தாக காய்க்கும். அதிக சத்து நிறைந்து இருப்பதால், பிற அவரைக்காய் காட்டிலும் மருத்துவ குணம் நிறைந்தது.இந்த அவரைக்காயின் காம்பு முழுதும் நீல நிறத்திலும், காய் குட்டையாகவும் இருக்கும். பிற ரக அவரைக்காயை காட்டிலும், இந்த ரக அவரைக்காய் சற்று வித்தியாசமாக இருப்பதால், சந்தையில் கூடுதல் விலை கொடுத்தும் வாங்க மக்கள் தயக்கம் காட்டுவதில்லை. அதேபோல், அதிக மகசூல் கிடைக்கிறது. கூடுதல் வருவாய் ஈட்ட முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு: பி.குகன், 94444 74428