உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / 5 ஆண்டில் போக்குவரத்து கழகங்களின் இழப்பு... ரூ.5,200 கோடி! பா.ஜ., ஆட்சி மீது ராமலிங்க ரெட்டி குற்றச்சாட்டு

5 ஆண்டில் போக்குவரத்து கழகங்களின் இழப்பு... ரூ.5,200 கோடி! பா.ஜ., ஆட்சி மீது ராமலிங்க ரெட்டி குற்றச்சாட்டு

பெங்களூரு: ''கர்நாடகாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நான்கு போக்குவரத்துக் கழகங்களில் மோசமான நிர்வகிப்பு, எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், 5,200 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது,'' என, மேல்சபையில், மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்ததும், முதலில் அறிவித்தது 'சக்தி' திட்டத்தை தான். இந்த திட்டத்தால் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். இதுவரை 200 கோடிக்கும் அதிகமான பெண்கள், அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்துள்ளனர்.இதற்கான கட்டணத்தை சம்பந்தப்பட்ட பெங்களூரு மெட்ரோ போக்குவரத்துக் கழகம்; கர்நாடக மாநில போக்குவரத்துக் கழகம்; கல்யாண கர்நாடகா போக்குவரத்துக் கழகம்; வடமேற்கு சாலை போக்குவரத்துக் கழகத்துக்கு, மாநில அரசு, மாதந்தோறும் வழங்கி வருகிறது.

பட்ஜெட்

முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்த, 2025 - 26ம் பட்ஜெட்டில், 'சக்தி' திட்டத்துக்கு, 5,300 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார். இந்த பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் பங்கேற்று, மேல்சபையில் பா.ஜ., உறுப்பினர் கேசவ பிரசாத் நேற்று பேசியதாவது:கர்நாடக அரசின் நான்கு போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்குவது அரசின் கவனத்துக்கு வந்து உள்ளதா? மாநில அரசின் வாக்குறுதித் திட்டங்களால் தான், இந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இல்லை என்றால், போக்குவரத்துக் கழகங்கள் இந்தளவு பாதிக்காது.கிராமப்புறங்களில் பஸ்கள் பற்றாக்குறை உள்ளது. அரசு புதிய பஸ்கள் வாங்குவதாக இருந்தால், கிராமப்புறங்களுக்கு எத்தனை பஸ்கள் ஒதுக்கப்படும்? கடந்த மூன்று ஆண்டுகளில், எத்தனை பஸ்களை அரசு வாங்கி உள்ளது?பஸ்களில் தொலைதுார ஊர்களுக்கு செல்லும் பயணியர், கழிப்பறை வசதி இல்லாமல் தவிக்கின்றனர். கழிப்பறை வசதி கொண்ட பஸ்கள் இயக்கப்படுமா?இவ்வாறு அவர் பேசினார்.

இழப்பு

இதற்கு பதிலளித்து, மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியதாவது:கர்நாடகாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நான்கு போக்குவரத்துக் கழகங்களில் மோசமான நிர்வகிப்பு, எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், 5,200 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.எரிபொருள் விலை உயர்வு, ஊழியர்களின் சம்பளம், வாகன உதிரிபாகங்களின் விலை உயர்வு ஆகியவற்றால் நிதி சுமை ஏற்பட்டுள்ளது. எனவே தான், கடந்த ஜனவரி மாதம் பஸ் கட்டணம், 15 சதவீதம் உயர்த்தப்பட்டது.'சக்தி' திட்டத்துக்கு, 2024 - 25ல், 9,978 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. இதில், 7,796 கோடி ரூபாய் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள 2,182 கோடி ரூபாய் விடுவிக்கப்பட வேண்டும். இதற்கு ஒப்புதல் கிடைத்ததும், நான்கு போக்குவரத்துக் கழகங்களுக்கும் வழங்கப்படும்.

1,000 நியமனம்

எங்கள் அரசு ஆட்சிக்கு வந்தது முதல், இதுவரை 5,360 பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. பி.எம்.டி.சி.,யை தவிர, மற்ற போக்குவரத்துக் கழகங்களுக்கு பஸ்களை வாங்க, முந்தைய அரசு முன்வரவில்லை.கடந்த 2016 முதல் 2023 வரை, 14,000 ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். அதன் பின் எந்த நியமனமும் நடக்கவில்லை. காலியாக உள்ள இடங்களுக்கு, இதுவரை 9,000 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். கருணை அடிப்படையில், 1,000 பேருக்கு பணி வழங்கப்பட்டு உள்ளது.நான்கு போக்குவரத்துக் கழகங்களும் தினமும், 1.96 லட்சம் சேவை இயக்கப்பட்டு வருகின்றன.கே.எஸ்.ஆர்.டி.சி., ஊழியர்களுக்கு மாதந்தோறும் அவர்களின் சுகாதாரத்துக்கு, 650 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம், அவர்களின் குடும்பத்தினர் சிகிச்சை பெறலாம். இத்திட்டம், மற்ற போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது.ஊழியர்கள் பெயர்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. மாநிலத்தின் 350 மருத்துவமனைகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மூன்று மாதங்களில் இப்பணி முடிவடையும்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி