மனிதருக்கு துாக்கம் அவசியம் கர்நாடக உயர் நீதிமன்றம் கருத்து
பெங்களூரு: பணியின் போது, துாங்கியதால் ஏட்டை 'சஸ்பெண்ட்' செய்திருந்த கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாக உத்தரவை, கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மனிதனுக்கு துாக்கம் அத்தியாவசிய தேவை என, கருத்து தெரிவித்துள்ளது.கல்யாண கர்நாடக போக்குவரத்து கழகத்தின் டிப்போவில், பாதுகாப்பு ஊழியராக ஏட்டு சந்திர சேகர் பணியாற்றுகிறார். இவர் பணி வேளையில் துாங்கியதாக தெரிகிறது. இதை காரணம் காட்டி, போக்குவரத்துக்கழக உயர் அதிகாரிகள், அவரை சஸ்பெண்ட் செய்தனர்.இதுகுறித்து கேள்வி எழுப்பி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். இம்மனு நீதிபதி நாகபிரசன்னா அமர்வு முன்னிலையில், நேற்று விசாரணைக்கு வந்தது. வாத, பிரதிவாதத்தை கேட்டறிந்த நீதிபதிகள், 'மனிதர்களுக்கு துாக்கம் மிகவும் அத்தியாவசியமானது. துாக்கம் மற்றும் பணி இடையே, இடைவெளி இருக்க வேண்டும். ஆனால் மனுதாரர் ஓய்வில்லாமல் 60 நாட்களாக, 16 மணி நேரம் பணியாற்றியுள்ளார். இதனால் இயல்பாக துாங்கியிருப்பார். இதற்காக அவரை சஸ்பெண்ட் செய்தது சரியல்ல.ஊழியர்களுக்கு சரியான துாக்கம் அவசியம். அளவுக்கு அதிகமான நேரம் பணியாற்றும்படி ஊழியரிடம் கூறினால், அவரது உடல் சோர்வடைந்து, துாங்கும்படி செய்யும். சரியான துாக்கம் இல்லையென்றால், மனிதன் எந்த இடத்தில் இருந்தாலும் துாக்கத்தில் ஆழ்ந்து விடுவார்' என கருத்து தெரிவித்து, சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.