வீட்டில் பதுக்கி வைத்திருந்த 100 கிலோ சந்தன கட்டை பறிமுதல்
சாம்ராஜ்நகர்: மங்களா கிராமத்தின் ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த, லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 100 கிலோ சந்தன கட்டைகளை, வனத்துறையினர் மீட்டனர். சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனுார் தாலுகாவின் மங்களா கிராமத்தில் வசிப்பவர் ராஜம்மா. இவரது வீட்டில் சட்டவிரோதமாக பெருமளவில், சந்தன கட்டைகளை பதுக்கி வைத்துள்ளதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது. எனவே நேற்று அதிகாலை, வனத்துறை அதிகாரிகள், அந்த வீட்டுக்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். வீட்டின் பல பகுதிகளில், மூட்டைகளில் சந்தன மரத்துண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பீரோவிலும் கூட, சந்தன மரக்கட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள, 100 கிலோ சந்தன கட்டைகளை அதிகாரிகள் கைப்பற்றினர். அந்த வீட்டில் இருந்த தேவம்மா என்பவரை, வனத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்று விசாரணை நடத்துகின்றனர். அந்த வீட்டில் ஒரு நபர், பல ஆண்டுகளாக சந்தன மரக்கட்டைகளை பதுக்கி வைத்தது, விசாரணையில் தெரிந்தது. அவரது பெயர் உட்பட, மற்ற விபரங்கள் இன்னும் தெரியவில்லை. அவரை கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர். வீட்டு உரிமையாளரான ராஜம்மாவிடமும், விசாரணை நடத்தப்படும் என தெ ரிகிறது.