சட்டவிரோதமாக தங்கியிருந்த 12 வங்கதேசத்தினர் கைது
கோலார்: வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக பெங்களூரு ரூரல், கோலார் மாவட்டங்களில் தங்கி இருந்த 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கோலார் மாவட்டம், சீனிவாசப்பூரில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய முகமது சையத் இஸ்லாம், 23, என்பவரிடம் போலீசார் விசாரித்தனர். ஒன்றரை மாதங்களுக்கு முன்பு தான் சீனிவாசப்பூருக்கு வந்ததாகவும், குப்பைகளை சேகரிக்கும் தொழிலில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார். வங்க தேசத்தில் இருந்து வந்ததாகவும், தன்னுடன் மேலும் சிலர் வந்ததாகவும், அவர்கள், பெங்களூரு ரூரல் மாவட்டம் நந்தகுடியில் இருப்பதாகவும் தெரிவித்தார். அதனை தொடர்ந்து, போலீசார் நந்தகுடிக்கு சென்றனர். அங்கு தங்கி இருந்தவர்களிடம், எஸ்.பி., நிகில் தலைமையில் விசாரித்தனர். அவர்கள், வங்கதேசத்தின் குல்னா மாநிலம், பாகேர் ஹாட் மாவட்டத்தின் தபல்பாரி கிராமத்தை சேர்ந்த முஸ்லிம்கள் என்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து, 3 மாத குழந்தை உட்பட 12 பேரை கைது செய்தனர். இவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக வங்கதேசத்தில் இருந்து, இங்கு வந்து குடியேறியவர்கள் என போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.