15 ஜெலட்டின் குச்சிகள் 30 டெட்டனேட்டர் பறிமுதல்
ஹுலிமாவு: பெங்களூரில் குடியிருப்பு பகுதியில், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 15 ஜெலட்டின் குச்சிகள், 30 டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பெங்களூரு ஹுலிமாவு அக் ஷய் நகர் பகுதியில், கடந்த சில தினங்களாக இரவு நேரத்தில் குண்டு வெடிப்பது போன்ற சத்தத்தை, குடியிருப்புவாசிகள் உணர்ந்தனர். தினமும் எங்கிருந்து சத்தம் கேட்கிறது என்று பார்த்த போது, அக் ஷய் நகரில் காலி நிலத்தில் ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள் வெடிக்கப்பட்டது தெரிந்தது. அக் ஷய் நகரில் வசிக்கும் சந்துரு என்பவர் வீட்டில் உள்ள சிறிய அறையில், ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்களை பதுக்கி வைத்திருந்ததும் தெரிந்தது. நேற்று அங்கு சென்ற போலீசார் 15 ஜெலட்டின் குச்சிகள், 30 டெட்டனேட்டர்களை பறிமுதல் செய்தனர். போலீஸ் வருவதை அறிந்த சந்துரு தப்பி ஓடி விட்டார். குடியிருப்பு பகுதியில் ஆபத்தான முறையில், வெடிபொருட்களை பயன்படுத்தியதாக அவர் மீது வழக்குப் பதிவாகி உள்ளது. அவரை கைது செய்தால் தான், எதற்காக இவற்றை வாங்கி பதுக்கி வைத்திருந்தார் என்பது தெரியவரும்.