தந்தையை கத்தியால் குத்தி 17 வயது சிறுவன் தற்கொலை
மங்களூரு: தந்தையுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால், கோபமடைந்த மகன், தந்தையை கத்தியால் குத்திவிட்டு, தானும் துப்பாக்கியால் முகத்தில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தட்சிணகன்னடா மாவட்டம், புத்துார் தாலுகாவின், பெட்டம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வசந்த் அமீன், 47. இவர் உப்பினங்கடியின், ராமக்குஞ்சா கிராமத்தில் விவசாய நிலம் வாங்கினார். அதில் உள்ள பழைய வீட்டில் மனைவி ஜெயஸ்ரீ, 40, மகன் மோக்ஷித், 17, உடன் வசிக்கிறார். குடும்ப பிரச்னை காரணமாக, கணவருடன் சண்டை போட்ட மனைவி, கோபித்து கொண்டு கடந்த ஆறு மாதங்களுக்கு முன், தன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். மனைவி சென்ற பின், தந்தையும், மகனும் வீட்டில் இருந்தனர். தாய் வீட்டை விட்டு சென்றதால், தந்தையுடன் தினமும் மோக்ஷித் சண்டை போட்டுள்ளார். நேற்று முன் தினம் இரவும், சண்டை நடந்த போது கோபமடைந்த மகன், கத்தியால் தந்தையை குத்திவிட்டு, துப்பாக்கியால் தன் முகத்தில் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். வசந்த் அமீன், தன் உறவினருக்கு போன் செய்து, நடந்ததை கூறி உதவி கேட்டார். அவரும் அங்கு வந்து, வசந்த் அமீனை மருத்துவமனையில் சேர்த்தார். நடந்ததை அறிந்து கிராமத்துக்கு வந்த மனைவி ஜெயஸ்ரீ கூறியதாவது: என் மகன், தந்தையை கொலை செய்ய முயற்சிக்கவில்லை. மாறாக மகனை என் கணவர் கொலை செய்துள்ளார். கிராமத்தில் உள்ள சொத்து, என் பெயரில் உள்ளது. அதை தன் பெயரில் மாற்ற, கணவர் விரும்பினார். இதற்கு மகன் சம்மதிக்கவில்லை. எனவே, பெர்லாவில் என் தாய் வீட்டில் என்னுடன் இருந்த மகன் மோக்ஷித்தை, ஒரு மாதத்துக்கு முன், கணவர் ராமகுஞ்சா கிராமத்துக்கு அழைத்து சென்றார். நேற்று முன்தினம் மோக்ஷித், எனக்கு போன் செய்தான். அப்போது தனக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால், அதற்கு தந்தையே காரணம் என கூறினான். எனவே இது குறித்து விசாரிக்க வேண்டும். வசந்த் அமீன் உடல்நிலை தேறியதும், அவரிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.