உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ரூ.3.20 கோடி மதிப்புள்ள 1,929 மொபைல் போன்கள்... பறிமுதல்!:பெங்களூரில் பல இடங்களில் திருடிய 42 பேர் கைது

ரூ.3.20 கோடி மதிப்புள்ள 1,929 மொபைல் போன்கள்... பறிமுதல்!:பெங்களூரில் பல இடங்களில் திருடிய 42 பேர் கைது

பெங்களூரு நகரின், பஸ், ரயில் நிலையங்கள், கோவில்கள், மார்க்கெட்டுகள், மக்கள் நெரிசல் மிகுந்த இடங்களில், மொபைல் போன்கள் திருட்டு குறித்து வழக்குகள் பதிவாகின. இது குறித்து, அந்தந்த பகுதி போலீசார், விசாரணை நடத்தி, மீட்ட விலை உயர்ந்த 1,929 மொபைல் போன்களை, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங், நேற்று பார்வையிட்டார். பின் அவர் அளித்த பேட்டி: மொபைல் போன்கள் திருடு போனால், புகார் அளிப்பதற்காக, 'கே.எஸ்.பி., ஆப்' உள்ளது. இதில் பதிவான புகார்கள் மற்றும் பெங்களூரின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பொதுமக்கள் அளித்த புகார்களின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த போன்களை திருடி, விற்பனை செய்த 42 பேர் கைது செய்யப்பட்டனர். நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, 'ஸ்மார்ட் போன்'களை பறிமுதல் செய்தனர். சிட்டி மார்க்கெட், அம்ருதஹள்ளி, உப்பார்பேட், விஜயநகரா உட்பட பல்வேறு போலீஸ் நிலைய எல்லையில் பதிவான வழக்குகளில், வெவ்வேறு நிறுவனங்களின், 1,929 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு, 3.20 கோடி ரூபாயாகும். அனைத்தும் விலை உயர்ந்த போன்களாகும். பெங்களூரில் மொபைல் போன்கள் திருட்டு அதிகரிக்கிறது. எனவே, 'செகண்ட் ஹேண்ட்' மொபைல் போன்களை வாங்கும் போது, பொது மக்கள் மிகுந்த விழிப்புடன் இருப்பது அவசியம். திருட்டு மொபைல் போன்களை வாங்கினால், சட்டத்தின் பிடியில் சிக்க நேரிடும். போன்களை வாங்கும் போது, நன்றாக ஆய்வு செய்வது நல்லது. குறைந்த விலைக்கு போன் கிடைக்கிறது என, வாங்க கூடாது. மொபைல் போன்கள் திருடு போனால், தாமதிக்காமல் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். உடனடியாக புகார் அளித்தால், குற்றவாளிகளை பிடிக்க போலீசாருக்கு உதவியாக இருக்கும்.அது மட்டுமின்றி, மொபைல் போன்கள், குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதை தவிர்க்கலாம். மொபைல் போன் திருட்டு குறித்து, எங்களுக்கு தினமும் புகார்கள் வந்தன. இதை தீவிரமாக கருதி, உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம். குற்றவாளிகளை கண்டுபிடிக்க நடப்பாண்டு மார்ச்சில், தனி குழுக்கள் அமைக்கப்பட்டன. இக்குழுவினரும் பல கோணங்களில் விசாரணை நடத்தி, குற்றவாளிகளை பிடித்து, மொபைல் போன்கள் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட மொபைல் போன்களில், 522 போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மீதமுள்ள போன்கள், 'இன்டகிரேடடு கமாண்ட் கன்ட்ரோல் சென்டரில்' வைக்கப்பட்டுள்ளன. உரிமையாளர்கள் தேவையான ஆவணங்களை தாக்கல் செய்து, போன்களை திரும்ப பெறலாம். கமாண்ட் கன்ட்ரோல் சென்டரில், டி.சி.பி., அளவிலான ஒரு அதிகாரி இருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !