விதவை அடித்து கொலை 2 கள்ளக்காதலர்கள் கைது
திலக்நகர்: விதவையை கொலை செய்து உடலை ஆட்டோவில் வைத்து சென்ற, இரண்டு கள்ளக்காதலர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். பெங்களூரு திலக்நகரில் வசித்தவர் சல்மா, 35. இவரது கணவர் ஆறு மாதங்களுக்கு முன்பு, உடல்நலக்குறைவால் இறந்தார். சல்மாவுக்கு, நான்கு பிள்ளைகள் உள்ளனர். கணவர் இறந்த பின், திலக்நகரில் வசிக்கும் பெயின்டர் சுப்பிரமணி, 34 என்பவருடன், சல்மாவுக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து கொண்டனர். இதற்கிடையில் சல்மாவுக்கும், சுப்பிரமணியின் நண்பர் செந்திலுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. தனது நண்பர் என்பதால், செந்திலுடன், சல்மா கள்ளக்காதலில் இருந்ததை சுப்பிரமணி கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் சல்மாவுக்கு, இன்னொருவருடனும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த சுப்பிரமணி, செந்தில் ஆகிய இருவரும் கோபம் அடைந்தனர். நேற்று முன்தினம் அதிகாலை சல்மாவை, சுப்பிரமணியும், செந்திலும் சேர்ந்து சரமாரியாக தாக்கினர். இதில் சுருண்டு விழுந்த அவர் இறந்தார். அவரது உடலை தோளில் சுமந்து வந்து, திலக்நகர் போலீஸ் நிலையத்தில் இருந்து 100 மீட்டர் துாரத்தில், காலி இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவில் வைத்து விட்டு சென்றனர். நேற்று முன்தினம் சல்மாவின் உடல் மீட்கப்பட்டது. சல்மா குடும்பத்தினர் அளித்த புகாரில் கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், சுப்பிரமணி, செந்திலை கைது செய்தனர்.