ஆண் வேடமணிந்து திருட்டு பெங்களூரில் 2 பெண் கைது
பெங்களூரு: ஆண் வேடம் அணிந்து, வீடுகளில் திருடிய ஆட்டோ ஓட்டுநர் உட்பட இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர்.இது குறித்து, போலீஸ் துறை வெளியிட்ட அறிக்கை:பெங்களூரின், டி.ஜெ.ஹள்ளியில் வசிப்பவர் நிலோபர் 22. இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றுகிறார். ஆண் வேடம் அணிந்து ஆட்டோ ஓட்டியபடி நோட்டம் விடும் இவர், வீடுகள், கடைகளில் புகுந்து பணம், தங்கநகைகளை திருடுவார்.கடந்தாண்டு திருட்டு வழக்கில், இவரை பாகல்குன்டே போலீசார் கைது செய்தனர். சிறையில் இருந்து விடுதலையான நிலோபர், ஷபரீன் தாஜ், 38, என்பவருடன் சேர்ந்து மீண்டும் திருட்டில் ஈடுபட்டார். இருவரும் பகலில் ஆட்டோவில் சென்றபடி, பூட்டிய வீடுகளை நோட்டம் வீடுவர். இரவு அங்கு சென்று பூட்டை உடைத்து திருடுவர்.நடப்பாண்டு மார்ச் 17ம் தேதி, பொம்மனஹள்ளியில் பூட்டப்பட்டிருந்த வீட்டில் புகுந்து, 130 கிராம் தங்க நகைகள், 3 லட்சம் ரூபாயை திருடினர். இது குறித்து, வீட்டு உரிமையாளர் அளித்த புகாரின் படி, விசாரணை நடத்திய போலீசார், நிலோபர் மற்றும் ஷப்ரீன் தாஜ் ஆகியோரை, சில நாட்களுக்கு முன் கைது செய்தனர்.இவர்கள் திருட்டு நகைகளை வெவ்வேறு இடங்களில், அடமானம் வைத்திருந்தனர். இது பற்றி தகவல் சேகரித்து, நகைகள் மீட்கப்பட்டன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.