பழைய வீட்டை சீரமைக்கும் போது சுவர் இடிந்து 2 தொழிலாளர்கள் பலி
பெலகாவி: அதானியில் பழைய வீட்டை சீரமைக்கும் போது, வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்ததில், இரு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பெலகாவி மாவட்டம் அதானி தாலுகாவின் கொட்டலாகி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமிபாய் நந்தகொண்டா. இவருக்கு இதே கிராமத்தில், பழைய வீடு உள்ளது. சில நாட்களாக பெய்த மழையால், வீட்டின் சில இடங்களின் மேற்கூரையை சீரமைக்க திட்டமிட்டார். இதற்கான பணியில், அதே கிராமத்தை சேர்ந்த மாதவ் கிருஷ்ணப்பா படிகர், 48, சையது கெம்பாவடி, 32, ஆகியோரை பணியமர்த்தினார். இருவரும் நேற்று காலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வீட்டின் ஒரு பக்கத்தின் சுவர், மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில், இருவரும் மண்ணுக்குள் புதைத்தனர். சத்தம் கேட்டு வெளியே வந்த அக்கம் பக்கத்தினர், பொக்லைன் இயந்திரம் மூலம் மண்ணை அகற்றினர். மண்ணில் புதைந்த இருவரையும் மீட்டு, மஹாராஷ்டிரா மாநிலம் ஜார்ட் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.