சிறுமியர் பலாத்காரம் 2 வாலிபர்கள் கைது
பெங்களூரு: அறிமுகம் உள்ள இரண்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோவில் பதிவு செய்து வெளியிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். சித்ரதுர்கா மாவட்டத்தின் யம்மனகட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிரண் குமார், 29. இவர் தன், 50 ஆடுகளை மேய்ப்பதற்காக, பெங்களூரின் கக்கலிபுராவுக்கு வந்திருந்தார். பெங்களூரின் கனகபுரா சாலையின் நீச்சல் குளத்தை சுத்தம் செய்யும் பணியை செய்பவர் ஆதித்யா, 20. இவர்கள் இருவரும் உறவு முறையில் சகோதரர்கள். இருவருமே கக்கலிபுராவில் வசிக்கின்றனர். ஆடு மேய்க்கும் போது, இவர்களுக்கு 13 மற்றும், 15 வயது சிறுமியரின் குடும்பத்தினர் அறிமுகமாகினர். இந்த அறிமுகத்தை பயன்படுத்தி, சிறுமியரிடம் பழகிய ஆதித்யாவும், கிரண்குமாரும் சில நாட்களுக்கு முன், சிறுமியரை கக்கலிபுராவின் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்து சென்று, பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த காட்சியை தங்களின் மொபைல் போனில் வீடியோ பதிவு செய்து, சமூகவலைதளத்தில் வெளியிட்டனர். சிறுமியர் பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆபாச வீடியோக்கள் குறித்து, தேசிய சைபர் குற்றப்பிரிவு கவனித்தது. வீடியோக்களை ஆய்வு செய்த போது, கக்கலிபுராவில் சம்பவம் நடந்திருப்பது தெரிந்தது. அதன் பின், கக்கலிபுரா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் இறங்கிய போலீசார், பாதிக்கப்பட்ட சிறுமியரின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு தகவல் கேட்டறிந்தனர். சிறுமியர் கூறிய விபரங்களின் அடிப்படையில், ஆதித்யா, கிரண்குமார் ஆகியோரை கைது செய்தனர்.