உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  2 தொகுதி இடைத்தேர்தல் உச்சகட்ட பாதுகாப்பு 

 2 தொகுதி இடைத்தேர்தல் உச்சகட்ட பாதுகாப்பு 

பாகல்கோட்: இடைத்தேர்தல் நடக்கும் பாகல்கோட், தாவணகெரே தெற்கு தொகுதிகளில் இன்று ஓட்டுப்பதிவு நடக்க உள்ளதை ஒட்டி, அசம்பாவித சம்பவங்களை தடுக்க உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் மேட்டி, சாமனுார் சிவசங்கரப்பா மறைவால் காலியான பாகல்கோட், தாவணகெரே தெற்கு தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, வாக்காளர்கள் ஓட்டு போட உள்ளனர். பாகல்கோட் தொகுதியில் 1,26,761 ஆண்கள், 1,32,476 பெண்கள், 23 திருநங்கையர் என 2,59,260 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 4,188 பேர் முதல் முறை ஓட்டு போடுபவர்கள். 3,017 பேர் 85 வயதை தாண்டியவர்கள், 38 பேர் நுாறு வயதை தாண்டிய வேட்பாளர்கள். தாவணகெரே தெற்கில் 1,13,654 ஆண்கள், 1,17,986 பெண்கள், 43 திருநங்கையர் என 2,31,683 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 2,774 பேர் முதல்முறை தங்கள் ஓட்டை பதிவு செய்ய உள்ளனர். 2,066 பேர் 85 வயதை தாண்டியவர்கள், 44 பேர் 100 வயதை கடந்தவர்கள். ஓட்டு பதிவுக்காக பாகல்கோட்டில் 319; தாவணகெரே தெற்கில் 284 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஓட்டு போட வருவோர், வாக்காளர் அடையாள அட்டையை கட்டாயம் எடுத்து வர வேண்டும். அது இல்லாத பட்சத்தில் மாற்று ஆவணமாக ஆதார், பான் கார்டுகள், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், தொழிலாளர் நல அமைச்சகம் கீழ் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, மத்திய அல்லது மாநில அரசின் பொது துறை நிறுவனங்கள் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை எடுத்து வரலாம். காங்கிரசின் கோட்டையாக உள்ள தாவணகெரே தெற்கில் முதல் முறையாக வெற்றி பெறும் முனைப்பில் பா.ஜ., உள்ளது. காங்கிரஸ் வேட்பாளராக அமைச்சர் மல்லிகார்ஜுன் மகன் சமர்த் போட்டியில் உள்ளார். ஓட்டுப்பதிவின் போது இரு கட்சி தொண்டர்கள் இடையில், ஏதாவது பிரச்னை ஏற்பட்டு, அசம்பாவித சம்பவங்கள் நடந்து விட கூடாது என்பதற்காக, தாவணகெரே தெற்கில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாகல்கோட்டிலும் இதே நிலை நீடிக்கிறது. ஓட்டுப்பதிவு இன்று முடியும் நிலையில், மே 4ம் தேதி வரை முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை