ஏரிக்குள் பாய்ந்த பஸ் 40 மாணவர்கள் தப்பினர்
ஹாசன்: ஏரிக்கரையில் சென்று கொண்டிருந்த பள்ளி பஸ், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. 40 மாணவ, மாணவியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஹாசன் மாவட்டம், அரகலகூடு தாலுகா, ஹள்ளி மைசூரு பேரூராட்சியின் முக்கனஹள்ளி கிராமம் அருகே, நேற்று காலை தனியார் பள்ளி பஸ் ஒன்று, மாணவர்களை ஏற்றி கொண்டு பள்ளிக்கு சென்று கொண்டிருந்தது. ஏரிக்கரை ஒன்றில் செல்லும் போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், ஏரிக்குள் பாய்ந்தது. அப்போது, எதிரே இருந்த மரத்தின் மீது மோதியதால், பஸ் ஏரிக்குள் விழாமல் தப்பியது. உடன் பஸ்சில் இருந்த 40 மாணவ, மாணவியரும் கீழே இறங்கியதால், அதிர்ஷடவசமாக உயிர் தப்பினர். இதையறிந்த பெற்றோர், சம்பவ இடத்தில் குவிந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த ஹள்ளி மைசூரு போலீசார், பஸ்சை அப்புறப்படுத்த ஏற்பாடு செய்தனர். லேசான காயமடைந்த மாணவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். விசாரணையில் அந்த பள்ளி பஸ்சுக்கு எப்.சி.,மற்றும் இன்சூரன்ஸ் இல்லாதது தெரிந்தது. இந்த பஸ் சித்தராமேஸ்வரா பள்ளிக்கு சொந்தமானது. ஏரியை ஒட்டி இருந்த மரம், பஸ் ஏரியில் விழாமல் தடுத்தது. இல்லாவிட்டால் நீரில் விழுந்து, பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும் என்று, கிராமத்தினர் கூறினர். சம்பவம் பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.