உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சட்டவிரோதமாக கருக்கலைப்பு மைசூரில் 5 பேர் அதிரடி கைது

சட்டவிரோதமாக கருக்கலைப்பு மைசூரில் 5 பேர் அதிரடி கைது

மைசூரு: சட்டவிரோதமாக கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டறிந்து தெரிவித்ததுடன் கருக்கலைப்பும் செய்ததாக, மைசூரில் ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். மைசூரு நகரின் ஹனுகனஹள்ளி கிராமத்தில் சொகுசு வீட்டை ஸ்கேனிங் சென்டராக மாற்றி, கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை சட்டவிரோதமாக கண்டறிந்து சொல்வதாகவும், கருக்கலைப்பு செய்வதாகவும் சுகாதாரத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள், நேற்று அதிகாலை தோட்டங்களுக்கு நடுவே இருந்த சொகுசு பங்களாவுக்கு சென்றனர். அதிரடி சோதனையில் அந்த பங்களாவில் நவீன ஸ்கேனிங் இயந்திரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வீட்டில் இருந்து 3 லட்சம் ரொக்கம், மருத்துவ உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சட்டவிரோதமாக ஸ்கேனிங் சென்டர் நடத்தியது தொடர்பாக, பெண் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் விசாரணை நடத்தியபோது, பெண் சிசுவை அழிக்க 30,000 ரூபாய் கட்டணம் வசூலித்துள்ளனர். அதிகாரிகள் சோதனை நடத்த சென்றபோது, இரண்டு கர்ப்பிணிகள் இருந்தனர். சட்டவிரோத ஸ்கேனிங் சென்டர் நடத்தியவர்கள், கிராமப்புற பெண்களை குறிவைத்து செயல்பட்டது, விசாரணையில் தெரிய வந்தது. அவர்களின் வீடுகளுக்கே சென்று, ஸ்கேனிங் சென்டருக்கு அழைத்து வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து, சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ், 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்ட பதிவு: பெண் சிசுக்களை அழிப்பது, சமுதாயத்துக்கு மிகப்பெரிய களங்கம். இதை கட்டுப்படுத்த மாநில அரசு கடுமையாக போராடுகிறது. இதுகுறித்து, சமுதாயத்துக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த செயலில் ஈடுபடுவோர், எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மைசூரில் வீட்டையே ஸ்கேனிங் சென்டராக மாற்றி, கருவில் இருந்த சிசுவின் பாலினத்தை கண்டுபிடிப்பதுடன், கருக்கலைப்பும் செய்ததை கண்டுபிடித்துள்ளோம். சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தகைய நடவடிக்கை தொடரும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை