உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / வங்கியில் ரூ.13 கோடி நகை கொள்ளை சேலம் சகோதரர்கள் உட்பட 5 பேர் கைது

வங்கியில் ரூ.13 கோடி நகை கொள்ளை சேலம் சகோதரர்கள் உட்பட 5 பேர் கைது

தாவணகெரே : வங்கி லாக்கரை உடைத்து 13 கோடி ரூபாய் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில், சேலம் சகோதரர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தாவணகெரே நியாமதி டவுனில் எஸ்.பி.ஐ., வங்கி உள்ளது. இந்த வங்கியில் கடந்த ஆண்டு அக்டோபர் 26ம் தேதி கொள்ளை நடந்தது. ஜன்னல் கம்பியை முறித்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்திவிட்டு, லாக்கரை உடைத்து 13 கோடி ரூபாய் மதிப்பிலான 17 கிலோ 705 கிராம் நகைகளை திருடிச் சென்றனர்.கொள்ளையர்களை கைது செய்ய, தாவணகெரே எஸ்.பி., உமா பிரசாந்த் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு இருந்தது. வங்கியில் எந்த தடயமும் கிடைக்கவில்லை. 'பக்கா பிளான்' செய்து கொள்ளையை அரங்கேற்றி இருந்தனர். அவர்களை பற்றி எந்த துப்பும் கிடைக்காமல் இருந்தது.

பேக்கரி

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு, சந்தேகத்தின்பேரில் நியாமதியின் மஞ்சுநாத் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். முதலில் முன்னுக்கு பின் முரணாக பதில் சொன்னார். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் வங்கியில் கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்டார்.அவர் கொடுத்த தகவலின்பேரில் நியாமதியில் பேக்கரி நடத்தி வரும், தமிழகத்தின் சேலத்தைச் சேர்ந்த சகோதரர்கள் விஜயகுமார், அஜய்குமார், ஹொன்னாளியின் அபிஷேக், சந்திரசேகர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.இவர்களின் கைது குறித்து எஸ்.பி., உமா பிரசாந்த் நேற்று அளித்த பேட்டி:நியாமதி கொள்ளை வழக்கில், ஐந்து மாதங்களுக்கு பின், தமிழகத்தை சேர்ந்த சகோதரர்கள் உட்பட 5 பேரை கைது செய்துள்ளோம். இவர்களிடம் இருந்து 225 கிராம் நகை தற்போது மீட்கப்பட்டு உள்ளது.மீதமுள்ள நகைகளும் விரைவில் மீட்கப்படும். தமிழகத்தின் அஜய்குமார், விஜய்குமார் பல ஆண்டுகளாக நியாமதியில் பேக்கரி நடத்தினர்.தொழிலை விரிவுபடுத்த வங்கிக்கு சென்று கடன் கேட்டுள்ளனர். அவர்களிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு, வங்கி ஊழியர்கள் கடன் வழங்க மறுத்துள்ளனர்.

மொபைல் டவர்

இதனால் சகோதரர்கள் தங்களது கூட்டாளிகளுடன் சேர்த்து கொள்ளை அடித்தது தெரிந்து உள்ளது. கைதான 5 பேரும் 30 வயதுக்கு உட்பட்டவர்கள். இதற்கு முன்பு எந்த குற்ற பின்னணியும் இல்லை. கொள்ளை அடிப்பது எப்படி என்று யு டியுப் வீடியோ பார்த்துள்ளனர்.கொள்ளை அடிப்பதற்கு முன்பு மொபைலை ஒரே இடத்தில் வைத்துவிட்டு, நான்கு பேரும் பின்பக்கமாக வங்கிக்கு சென்றுள்ளனர்.லாக்கரை உடைத்து நகைகளை திருடிவிட்டு மிளகாய் பவுடரை துாவிவிட்டுச் சென்றுள்ளனர். யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி இயல்பாக இருந்தனர். ஐந்து பேரின் மொபைல் போன் டவரும் ஒரே இடத்தில் இருந்ததால் முதலில் அவர்கள் மீது சந்தேகம் வரவில்லை. ஆனாலும் சில தகவல்கள், தொழில்நுட்ப அடிப்படையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Padmasridharan
மார் 29, 2025 08:28

லஞ்சம் வாங்கிய வங்கி ஊழியர்கள் இவர்களை கொள்ளைக்கு தூண்டி விட்டிருக்கிறார்கள். லஞ்சம் வாங்கும் அதிகார பிச்சைக்காரர்களுக்கு என்ன தண்டனை?


KRISHNAN R
மார் 31, 2025 21:21

அதுக்கெல்லாம்.. இவிடன்ஸ் இல்லை என்று சொல்லலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை