உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பத்து ஆண் யானைகளை பிடிக்க 7 கும்கிகள் தயார்

பத்து ஆண் யானைகளை பிடிக்க 7 கும்கிகள் தயார்

ஹாசன்: பேலுார் யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்ததன் எதிரொலியாக, அப்பகுதியில் சுற்றித்திரியும் பத்து ஆண் யானைகளை பிடிப்பதற்காக, பிரஷாந்த் யானை உட்பட ஏழு கும்கி யானைகள் களத்தில் இறங்கி உள்ளன. ஹாசன் மாவட்டம் பேலுாரில் கடந்த மூன்று நாட்களில் யானை தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம், கிராமத்தினரிடம் கோபத்தை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர்கள் உடலை வாங்க மறுத்து நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களிடம் மாவட்ட பொறுப்பு அமைச்சர் சிவலிங்கே கவுடே பேச்சு நடத்தி சமாதானம் செய்தார். இதையடுத்து, பேலுார் பகுதியில் சுற்றித்திரியும் 10 ஆண் யானைகளை பிடித்து, வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யும்படி வனத்துறை உத்தரவிட்டது. யானைகளை பிடிப்பதற்காக துபாரே, மத்திகோடு, சக்ரேபைலு ஆகிய யானை முகாம்களிலிருந்து மைசூரு தசராவில் அம்பாரியை சுமந்த பிரஷாந்த், ஸ்ரீகண்டா, ஏகலவ்யா, அசோக், ஐயப்பா, மாணிக்யா, ரோஹித் ஆகிய ஏழு கும்கி யானைகள் பேலுாரின் பிக்கோடு யானை முகாமிற்கு நேற்று அழைத்து வரப்பட்டன. கும்கி யானைகளுக்கு மாலை அணிவித்து, பூஜை செய்யப்பட்டன. ஆறு குழுக்களாக யானை கூட்டத்தை தேடும் பணி துவங்கியது. தேடுதல் பணியில் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. வருவாய், வன அதிகாரிகள், போலீசார் என ஏராளமானோர் பேலுாரில் முகாமிட்டு உள்ளனர். யானை கூட்டத்தை பிடிக்க கூடுதலாக கும்கி யானைகள் வரவழைக்கப்படலாம் என வன அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை