உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  75 சதவீதம் பேர் பாஸ் ஆனால் ஆசிரியர்களுக்கு ரூ.1,000 பரிசு

 75 சதவீதம் பேர் பாஸ் ஆனால் ஆசிரியர்களுக்கு ரூ.1,000 பரிசு

பெங்களூரு: நடப்பாண்டு எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் அரசு உயர்நிலை பள்ளி மாணவர்கள், 75 சதவீதம் தேர்ச்சி பெற்றால், பள்ளி ஆசிரியர்களுக்கு, 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க, கல்வி துறை முடிவு செய்து உள்ளது. கர்நாடகாவில், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில், அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் ஆண்டுதோறும் குறைந்து கொண்டே வருகிறது. கடந்தாண்டு 66.14 சதவீதம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தனர். தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்காக நடத்தப்படும் மறு தேர்விலும், பெரும்பாலான மாணவர்கள் தேர்ச்சி பெறுவதில்லை. அதேவேளையில், தனியார் பள்ளி மாணவர்கள், நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று வருகின்றனர். இவர்களை போன்று, அரசு பள்ளி மாணவர்களும் தேர்ச்சி பெற வேண்டும் என்று முதல்வர் சித்தராமையா விரும்பினார். இது தொடர்பாக கல்வி துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தற்போது பள்ளி கல்வி துறை அமைச்சர் மது பங்காரப்பாவுக்கு, மாணவர் தேர்ச்சி விஷயத்தில், 2025 - 26ம் ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி சதவீதம் 75 சதவீதம் இருக்க வேண்டும் என புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த வகையில் மாணவர்கள் 75 சதவீதம் தேர்ச்சி பெற்றால், அவர்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. நடப்பாண்டுக்கான பாடங்கள் அனைத்தும், கடந்த மாதமே முடிவடைந்து விட்டன. மார்ச்சில் நடக்கும் பொது தேர்வுக்காக, ஜனவரி, பிப்ரவரியில் மாணவர்களை தயார் செய்ய வேண்டும். அதேவேளையில், 2026 ஜனவரி, பிப்ரவரியில் பல விடுமுறைகள் வருகின்றன. எனவே, இவ்விரு மாதங்களிலும் தினமும் காலை, மாலையில் பள்ளி துவங்குவதற்கு முன்னரும், முடிந்த பின்னரும், மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ