அனுமதியின்றி டி.ஜே., நிகழ்ச்சி கர்நாடகாவில் 80 வழக்கு பதிவு
பெங்களூரு : கர்நாடகாவில் அனுமதியின்றி மற்றும் விதிகளை மீறி டி.ஜே., இசை நிகழ்ச்சி நடத்தியது தொடர்பாக, 80 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில போலீஸ் துறை தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் பொது இடங்களில் டி.ஜே., எனும் இசை நிகழ்ச்சி நடப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு 10:00 முதல் காலை 6:00 மணி வரையும் டி.ஜே., நிகழ்ச்சிக்கு தடை உள்ளது. டி.ஜே., நிகழ்ச்சிகளால் ஒலி மாசுபாடு ஏற்படுவதாக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியமும் தெரிவித்திருந்தது. இதனால், டி.ஜே.,க்களுக்கு அனுமதி அளித்தாலும் பல கட்டுப்பாடுகளை போலீசார் விதிக்கின்றனர். இருப்பினும், மாநிலத்தின் பல பகுதிகளிலும் தடை செய்யப்பட்ட நேரங்கள், பொது இடங்களில் அதிக சத்தத்துடன் டி.ஜே., நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பாக போலீசாரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து மாநில போலீஸ் துறை வெளியிட்ட அறிக்கை: டி.ஜே., நிகழ்ச்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி அனைத்து மாவட்ட எஸ்.பி.,க்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. நடப்பாண்டில் இதுவரை மாநிலத்தில் உள்ள டி.ஜே., அமைப்பாளர்களுடன் சேர்ந்து, 1,296 விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதில், அவர்களுக்கு பல அறிவுரைகள் வழங்கப்பட்டன. குடியிருப்பு பகுதிகளில் பகலில் 55 டெசிபல்; இரவில் 45 டெசிபல் அளவுக்கு மேல் ஒலி எழுப்பக்கூடாது. இருப்பினும், சிலர் 110 டெசிபல் வரை ஒலி எழுப்பி வருகின்றனர். இதனால், மாரடைப்பு போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது. வனம் சார்ந்த பகுதிகளுக்கு அருகில் நடக்கும்போது விலங்குகளுக்கும் பிரச்னை ஏற்படுகிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டது தொடர்பாகவும், அனுமதியின்றி நிகழ்ச்சி நடத்தியது தொடர்பாகவும் மாநிலம் முழுதும் நடப்பாண்டில் 80 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 135 டி.ஜே., கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.