அதிக வட்டி கேட்டு தொல்லை டிரைவர் துாக்கிட்டு தற்கொலை
பசவேஸ்வராநகர்: கடன் கொடுத்தவர் தொல்லையால், கார் டிரைவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெங்களூரு பசவேஸ்வராநகரில் வசித்தவர் பசவராஜ், 48. வாடகை கார் டிரைவர். இவர், நேற்று மதியம் தன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன், மொபைல் போனில் எடுத்த வீடியோவில், 'என் நண்பர் மூலம் மகேந்திரா என்பவரிடம் 50,000 ரூபாய் கடன் வாங்கி இருந்தேன். அதற்கு வட்டியும் செலுத்தி வந்தேன். திடீரென, வட்டி தொகையை அதிகரித்தார். மொத்தம் 50,000 ரூபாய் கடனுக்கு 10,000 ரூபாய் வட்டி கேட்டு தொல்லை கொடுத்தார். இதற்கு மறுத்ததால் என்னை மிரட்டினார். இதனால் தற்கொலை செய்து கொள்கிறேன்' என, பசவராஜ் பேசி இருந்தார். இந்த வீடியோவின் அடிப்படையில், பசவராஜ் குடும்பத்தினர் அளித்த புகாரில், மகேந்திரா மீது பசவேஸ்வராநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலை மறைவாக உள்ள அவரை தேடுகின்றனர்.