பாலியல் வழக்கில் விடுவிக்க நீதிமன்றத்தை நாடிய மடாதிபதி
யாத்கிர்: சிறுமியிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாக, மடாதிபதி மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, கர்நாடகா ஐகோர்ட் கலபுரகி கிளையில், மடாதிபதி மனுத்தாக்கல் செய்துள்ளார். யாத்கிர் மாவட்டம் ஷாஹாபூர் தாலுகாவில் யமனுாரப்பா முத்யா மடம் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியாக இருப்பவர் மல்லிகார்ஜுன முத்யா, 26. இவ ர், கடந்த சில ஆண்டுகளில் சமூக வலைத்தளங்கள் மூலம் பிரபலமானார். இவர் தன்னை தானே கடவுள் என்றும் அறிவித்துக் கொண்டார். இவரை பலரும் பின்தொடர்கின்றனர். இவரை 'அப்பாஜி' எனவும், அவரது பக்தர்கள் அழைக்கின்றனர். இவர் தன் மடத்திற்கு கடந்த, 19ம் தேதி வருகை தந்த, 14 வயது சிறுமியை, அவர்கள் பெற்றோர் முன்னிலையிலேயே மடியில் படுக்கவைத்து அநாகரிகமாக நடந்து கொண்டார். இதை, சிறுமியின் குடும்பத்தினர் ஒருவர் தன் மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். வீடியோவில் மல்லிகார்ஜுன முத்யா, சிறுமியிடம் அநாகரிகமாக நடப்பது தெரிந்தது. இது, சிறுமிக்கு பிடிக்காமல் அவரிடமிருந்து வருவதற்கு சிறுமி செய்யும் செயல்கள் பதிவானது. இது, சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியது. கர்நாடக மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், யாத்கிர் போலீஸ் எஸ்.பி., பிருத்விக் ஷங்கர் உடனடியாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்தியது. பின்னர், கடந்த 25ம் தேதி கோகி போலீஸ் நிலையத்தில் மல்லிகார்ஜுன மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் கூறுகையில், 'நாங்கள் குடும்பத்துடன் கடந்த மூன்று ஆண்டுகளாக மடத்திற்கு வந்து செல்கிறோம். அப்பாஜி சாமிகள் தவறான எண்ணத்தில் எங்கள் வீட்டு பெண்ணிடம் நடந்து கொள்ளவில்லை. சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன' என்றனர். இதற்கிடையில், தலைமறைவாக உள்ள மல்லிகார்ஜுன முத்யா, வீடியோ ஒன்றை வெளியிட்டார். வீடியோவில், 'சிறுமியை என் மகள் போல பாவித்து, அவளுடன் விளையாடினேன். ஆனால், தவறான கண்ணோட்டத்தில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. எந்த ஒரு போலீஸ் விசாரணைக்கும் தயாராக உள்ளேன்' என்று தெரிவித்திருந்தார். யாத்கிர் மாவட்ட போலீஸ் எஸ்.பி., பிருத்விக் ஷங்கர் கூறுகையில், “மல்லிகார்ஜுன முத்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை செய்யப்பட்டு உள்ளது. குழந்தைகள் உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தலின் பேரில், வழக்குப்பதிந்து விசாரணை நடக்கிறது,” என்றார். இந்நிலையில், நேற்று கர்நாடகா உயர் நீதிமன்றம் கலபுரகி கிளையில், தன் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்யக்கோரி மல்லிகார்ஜுன சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மனுவில், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகார் எதுவும் அளிக்கவில்லை. அவர்களே தங்கள் குழந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படவில்லை என்று கூறியது முதன்மை வாதமாக வைக்கப்பட்டு உள்ளது.