அசிம் பிரேம்ஜி பல்கலையில் ஏ.பி.வி.பி., திடீர் போராட்டம்
சர்ஜாபூர்: தேசவிரோத செயல்களுக்கு ஆதரவு வழங்குவதாக கூறி, அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து, ஏ.பி.வி.பி., மாணவர் அமைப்பினர் நேற்று போராட்டம் நடத்தினர். கல்லுாரியின் பெயர் பலகை மீது கருப்பு மை பூசினர். பெங்களூரு ரூரல் சர்ஜாபூரில் அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் நாளை, நாளை மறுநாள், 28ம் தேதிகளில், 'ஸ்பார்க்' என்ற அமைப்பின் மூலம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியின் போது நாடக மேடைகளில் ராணுவ வீரர்களை பாலியல் வன்கொடுமை செய்பவர்களாகவும், வன்முறையாளர்களாகவும் சித்திரிக்கும் வகையிலும், காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என்பதை வெளிப்படுத்தவும் திட்டமிட்டு இருந்ததாக, ஏ.பி.வி.பி., மாணவர் அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது. நேற்று மாலை பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்த அவர்கள், பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் என்று எழுதப்பட்டு இருக்கும் பலகை மீது, கருப்பு மை பூசினர். இந்த நேரத்தில் ஒரு மாணவர் அமைப்பினர், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வந்த போலீசார் ஏ.பி.வி.பி., மாணவர் அமைப்பின் 15 பேரை கைது செய்து அழைத்து சென்றனர். இந்நிலையில் தேச விரோத செயல்களை ஆதரிக்கும், அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழக அங்கீகாரத்தை ரத்து செய்ய கோரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, ஏ.பி.வி.பி., மாணவர் அமைப்பு கடிதம் எழுதி உள்ளது.