அரசு ஊழியர்களை மிரட்டிய ஆர்.டி.ஐ., ஆர்வலர் கைது
பெங்களூரு: லோக் ஆயுக்தா அதிகாரி என்று கூறி, அரசு ஊழியர்களை மிரட்டி பணம் பறித்த, கோலாரை சேர்ந்த ஆர்.டி.ஐ., ஆர்வலர் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரில் வனத்துறையில் அதிகாரியாக பணியாற்றும் நபருக்கு, சில நாட்களுக்கு முன்பு ஒருவரிடம் இருந்து மொபைல் போனில் அழைப்பு வந்தது. 'லோக் ஆயுக்தா அதிகாரி பேசுகிறேன். உங்கள் மீது ஊழல் புகார் வந்துள்ளது. உங்கள் வீடுகளில் சோதனை நடத்த உள்ளோம். சோதனை நடத்தாமல் இருக்க 50,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று கேட்டுள்ளார். இதையடுத்து, தன்னை மிரட்டி பணம் பறிக்க முயன்ற நபர் மீது, விதான் சவுதா போலீசில், வனத்துறை அதிகாரி புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில், கோலாரை சேர்ந்த ஆர்.டி.ஐ., எனும் தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் முரளி, 45, என்பவர் தான், லோக் ஆயுக்தா அதிகாரி என்று கூறி, பல அரசு அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்தது தெரிந்தது. நேற்று அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் உறவினர் பெயரில் வங்கிக்கணக்கு துவங்கி, அதிகாரிகளிடம் இருந்து வாங்கும் பணத்தை அந்த வங்கிக்கணக்கில் டிபாசிட் செய்ததும் தெரிந்துள்ளது.