அரசியலுக்கு வரும் போது ஸ்டைலாக வருவேன்; சொல்கிறார் நடிகர் சுதீப்
- நமது நிருபர் - கன்னட திரையுலகை சேர்ந்த பல நடிகர், நடிகையர் அரசியலில் உள்ளனர். எம்.எல்.ஏ., அமைச்சர், எம்.எல்.சி.,யாக பதவி வகிக்கின்றனர். இவர்களின் வரிசையில், நடிகர் சுதீப்பும் இணைவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது. கன்னட திரையுலகில் ஜொலித்த நடிகர் அம்பரிஷ்; அரசியலில் நுழைந்து எம்.எல்.ஏ.,வாகவும், அமைச்சராகவும், எம்.பி.,யாகவும் பதவி வகித்தார். அவரது மனைவி சுமலதாவும் முன்னாள் எம்.பி.,யாவார். இவர்களின் மகன் அபிஷேக்கும், அடுத்த சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வருகிறார். நடிகையர் நடிகர்கள் பி.சி.பாட்டீல், சாய்குமார், சசிகுமார், யோகேஸ்வர், நிகில் குமாரசாமி, நடிகையர் உமாஸ்ரீ, ஜெயமாலா உட்பட பலர் அரசியலில் உள்ளனர். நடிகர் உபேந்திரா ஒரு படி முன்னேறி, தனிக்கட்சி துவங்கி உள்ளார். இவர்களை தொ டர்ந்து, நடிகர் சுதீப்பும் அரசியலில் நுழைய தயாராகி வருகிறார். இவரை அரசியல்வாதியாக பார்க்க, ரசிகர்கள் பலர் விரும்புகின்றனர். வேறு சிலரோ, இவருக்கு அரசியல் வேண்டாம் என்று கருத்து தெரிவித்துள்ள னர். கன்னட திரையுலகின் ஸ்டார் நடிகர்களில் சுதீப்பும் ஒருவர். அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுப்பவர். இவருக்கு அரசியல்வாதிகளுடன் நல்லுறவு உள்ளது. பா.ஜ.,வின் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் உட்பட முக்கிய தலைவர்களுக்கு சுதீப் நெருக்கமானவர். இவர் அரசியலுக்கு வருவார் என, பல நாட்களாக கூறப்பட்டு வந்தது. அதை அவர் மறுக்கவும் இல்லை; ஒப்புக்கொள்ளவும் இல்லை. தற்போது, அவராகவே அரசியலுக்கு வருவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து, நடிகர் சுதீப் கூறியதாவது: சமூக சேவைக்கு அரசியல் அவசியம் இல்லை. நம்மிடம் நல்ல மனமும், பணமும் இருந்தால் போதும். சமூக சேவை செய்யலாம். என்னால் முடிந்த அளவுக்கு, மற்றவர்களுக்கு உதவி செய்கிறேன். அரசியல் என்பது சமூக சேவையல்ல; அது ஒரு பொறுப்பு. அந்த பொறுப்பை நிர்வகித்து, மாநிலத்தை நடத்தி செல்ல வேண்டும். மக்களுக்கு நன்மை செய்ய நினைத்தால், அரசியலுக்கு வர வேண்டும். நான் அரசியலுக்கு வரும் போது, ஸ்டைலாக வருவேன்.அரசியலுக்கு வருவதும், திரைப்பட பயிற்சி போன்று தான். நல்ல திரைக்கதை தேவை. அது போன்று அரசியலுக்கு வர விரும்பினால், சவுண்ட் செய்து கொண்டே வருவேன். இவ்வாறு அவர் கூறினார். கடுப்பாகி முழுக்கு போட்டனர் அரசியலுக்கும், திரையுலகுக்கும் எப்போதுமே பிரிக்க முடியாத பந்தம் உள்ளது. திரையுலகில் ஜொலித்த பலரால், அரசியலில் ஜொலிக்க முடியவில்லை. அடுத்தடுத்த தோல்வியை சந்தித்ததால், கடுப்படைந்து அரசியலுக்கு முழுக்கு போட்டு, திரையுலகில் ஆர்வம் காட்டுகின்றனர். அரசியலை புரிந்து கொண்ட நடிகர்கள் ராஜ்குமார், விஷ்ணுவர்த்தன் போன்றவர்கள், இறுதி வரை அரசியலுக்கு வரவே இல்லை. இவர்களை அரசியலுக்கு அழைத்து வர, முக்கிய தலைவர்கள் முயற்சித்தும் பலன் இல்லை.