உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பெங்களூரு ஹோட்டல்களுக்கு இன்று கூடுதல் காஸ் சிலிண்டர் சப்ளை

 பெங்களூரு ஹோட்டல்களுக்கு இன்று கூடுதல் காஸ் சிலிண்டர் சப்ளை

பெங்களூரு: ''பெங்களூரு ஹோட்டல்களுக்கு கூடுதலாக, 7,500 வர்த்தக காஸ் சிலிண்டர்கள் இன்று வினியோகிக்கப்படும்,'' என, உணவுத்துறை அமைச்சர் முனியப்பா தெரிவித்தார். மேற்காசியாவில் நடக்கும் போரால், பெங்களூரில் வர்த்தக சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. பெங்களூரில் தினமும், 10,000 ஆயிரம் வர்த்தக காஸ் சிலிண்டர்கள் தினமும் வினியோகம் செய்யப்படுவதாகவும், சிலிண்டர் தட்டுப்பாடு விரைவில் குறையும் என்றும், உணவுத்துறை அமைச்சர் முனியப்பா சமீபத்தில் கூறினார். இருப்பினும், வர்த்தக சிலிண்டருக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில், அமைச்சர் முனியப்பா நேற்று கூறியதாவது: பெங்களூரில் இருக்கும் ஹோட்டல்களுக்கு கூடுதலாக, 7,500 வர்த்தக சிலிண்டர்கள் வழங்கபட உள்ளன. கூடுதல் சிலிண்டர்களை சேர்த்து மொத்தம், 17,500 சிலிண்டர்கள் வினியோகஸ்தர்களிடம் நேற்று இரவுக்குள் சேர்ந்திருக்கும். அவை இன்று ஹோட்டல்களுக்கு வினியோகிக்கப்படும். எனவே, ஹோட்டல் உரிமையாளர்கள் தேவையின்றி பீதியடைய வேண்டாம். காஸ் சிலிண்டர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என, மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து உள்ளேன். பிரதமர் மோடி முக்கிய முடிவை எடுக்க வேண்டும். மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.சிலிண்டர் வினியோகிக்கும் இடங்களுக்கு முன், மக்கள் யாரும் கூட வேண்டாம். சிலிண்டர் முன்பதிவு செய்வோர் நகரப்புறத்தில் வசிப்பவர்களுக்கு, 25 நாட்களுக்குள்; கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு, 45 நாட்களுக்குள் சிலிண்டர் வந்தடையும். அதிக விலைக்கு சிலிண்டர் விற்பனை செய்வோரின் உரிமம் ரத்து செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை