உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஸ்ரீசக்கரத்துடன் க்ஷணாம்பிகா தேவியை நிர்மாணித்த ஆதிசங்கரர்

ஸ்ரீசக்கரத்துடன் க்ஷணாம்பிகா தேவியை நிர்மாணித்த ஆதிசங்கரர்

மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கபட்டணாவில் அமைந்துள்ள 1,200 ஆண்டுகள் பழமையான க்ஷணாம்பிகா தேவி கோவிலில் அம்மனை மனமுருகி வேண்டினால், நாம் நினைத்த காரியத்தை, விநாடியில் (க்ஷணாம்) நிறைவேற்றி விடுவார் என்பதால், அம்மன், க்ஷணாம்பிகா தேவி என்று அழைக்கப்படுகிறார். சக்தி பீடங்கள் ஸ்தல புராணங்கள்படி, ஆதி சங்கராச்சாரியார், சக்தி பீடங்களை நிறுவ தெற்கு நோக்கி பயணித்தார். ரங்கநாதரின் தாயகமான ஸ்ரீரங்கபட்டணாவில் சக்தி தேவியை நிலை நிறுத்த வேண்டும் என்பதை உணர்ந்தார். தன் சக்தி மூலம், ஒரு இடத்தை கண்டறிந்து, க்ஷணாம்பிகா தேவியின் சிலையுடன் ஸ்ரீசக்கரத்தை பிரதிஷ்டை செய்தார். இந்த ஸ்ரீசக்கரம் இன்னும் உயிருடன் இருப்பதாக பக்தர்கள் கருதுகின்றனர். அமைதி, செழிப்பு சங்கராச்சாரியார் செய்த குறிப்பிட்ட மந்திரங்கள், சடங்குகள் காரணமாக, தெய்வீக சக்தியால் அதிர்வு ஏற்படுகிறது. ஸ்ரீசக்கரத்தில் எலுமிச்சை பழத்தை வைத்த பின், பக்தர்கள் கருவறையை மூன்று முறை வலம் வருகின்றனர். இதனால் மன அமைதி, தொழில் முன்னேற்றம், நீண்டகால சிரமங்கள் நீங்குவதையும் அனுபவ பூர்வமாக உணர்கின்றனர். இங்கு கடைபிடிக்கப்படும் பழங்கால ஜோதிட சடங்கான அஷ்டமங்கல பிரசன்னம், பக்தர்களின் கர்ம அல்லது கிரஹ பிரச்னைகளை தீர்க்கிறது. ஒரு விளக்கு, கண்ணாடி, தங்கம், பால், தயிர், பழங்கள், ஒரு புனித புத்தகம், ஒரு வெள்ளை துணி ஆகிய எட்டு புனித பொருட்களை பயன்படுத்தி, அர்ச்சகர் பூஜை செய்யும்போது, அமைதியும், செழிப்பும் ஏற்படுகிறது. சந்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு விளக்குகளை ஏற்றி வழிபட்டால் நல்லது. 1.5 லட்சம் விளக்கு தோற்றத்தில் எளிமையானதாக இருந்தாலும், இக்கோவில் ஆழமான கட்டடக்கலை, ஆன்மிக முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. இங்குள்ள பீஜாஷகர்பித ஸ்ரீசக்கரத்தில், அண்ட சக்தியை குறிக்கும் பீஜாஷரங்கள் என்ற விதை எழுத்துகள் பொறிக்கப்பட்டு உள்ளன. இக்கோவிலில் ஒரு காலத்தில், ஒரே நேரத்தில் 1.5 லட்சம் எண்ணெய் விளக்குகள் ஏற்றப்பட்ட ஒரு பிரமாண்டமான நிகழ்வு நடந்து வந்தது. ஒவ்வொரு விளக்கும், இப்பகுதியில் உள்ள ஒரு வீட்டை குறிக்கிறது. இந்த நிகழ்வு, ஜெய சாமராஜேந்திர உடையார் ஆட்சி வரை தொடர்ந்தது. கருவறையில், லலிதா மஹா திரிபுரசுந்தரியின் அவதாரமாக ஸ்ரீ க்ஷணாம்பிகா தேவி அருள்பாலிக்கிறார். இது, பார்வதி தேவியின் சக்தி வாய்ந்த வடிவமாகும். கோவில் வளாகத்தில் ஸ்ரீ ஜோதிர்மகேஸ்வர சுவாமி வடிவில் சிவன் சன்னிதி, ஸ்ரீதண்டபாணி சுப்பிரமணிய சுவாமி சன்னிதி, கிரிஜா கல்யாண மண்டபம் அமைந்துள்ளன - நமது நிருபர் - .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ