முதல் நாளே சுட்டெரித்த அக்னி நட்சத்திரம் குளிர்பானங்கள் விற்பனை ஜோர்
அக்னி நட்சத்திரம் துவங்கிய முதல் நாளே, பெங்களூரு நகர மக்கள் அவஸ்தை பட துவங்கி உள்ளனர். இதனால் நுங்கு, இளநீர், மோர், கரும்பு ஜூஸ் விற்பனை அதிகரித்து உள்ளது.வழக்கமாக கோடை காலத்தில் மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள், பூங்கா நகரமாக இருந்த பெங்களூருக்கு வருகை தந்தனர். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறி உள்ளது. இங்குள்ள மக்களே கோடை காலத்தில் குடும்பத்துடன் நான்கு முதல் ஐந்து நாட்கள் வெளியூர்களுக்கு சுற்றுலா சென்று விடுகின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் வானிலை மாறி மாறி வருகின்றன. ஆண்டு முழுதும் வெயில் அடித்தாலும், மே மாதம் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.இந்நிலையில் நேற்று கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் துவங்கியது. இம்மாதம் 28ம் தேதி வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.கடுமையான வெப்பநிலை நிலவும் என்பதால், பகல் நேரத்தில் குறிப்பாக மதிய நேரங்களில், தேவையின்றி வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது. கோடை காலத்தில் உடலில் நீரோட்டம் நிலைத்திருக்க அடிக்கடி தண்ணீர், பழச்சாறு, இளநீர் குடிப்பது நல்லது.அக்னி நட்சத்திரம் துவங்கிய முதல் நாளான நேற்று நகரின் கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா என மரங்கள் அதிகம் இருக்கும் இடங்களுக்கு குடும்பத்துடன் பலரும் தஞ்சம் புகுந்தனர்.சாலையில் எங்கு பார்த்தாலும், மக்கள் ஒரு கையில் சிறிய குடிநீர் பாட்டில்களுடன் உலா வருகின்றனர். சிலர் தொப்பி அணிந்தும், குடை பிடித்தபடியும் செல்கின்றனர்.அதுபோன்று நகரின் பல இடங்களில் இளநீர், நுங்கு, கரும்பு ஜூஸ் விற்பனை அதிகரித்து உள்ளது. பீஹாரில் இருந்து விற்பனைக்கு வந்திருந்த, 'லிச்சி' என்ற பழம், கிலோ 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஹலசூரு குருத்வார் சார்பில் பக்தர்களுக்கும், பொது மக்களுக்கும் இலவசமாக 250 லிட்டர் ரோஸ் மில்க் வழங்கினர்.வெயிலில் இரு சக்கர வாகனத்தில் செல்வோர், நுங்கு, இளநீர், கரும்பு ஜூஸ் கடைகளில் நின்று குடித்துவிட்டு செல்கின்றனர். அக்னி நட்சத்திர வெயிலில் போக்குவரத்தை சரி செய்யும் போக்குவரத்து போலீசாரின் நிலை தான் சோகம்.நீண்ட நேரம் தலையில் தொப்பி அணிந்து கொண்டு பணியாற்ற முடியாது. சிலர் ஒரு கையில் குடையை பிடித்து கொண்டு, போக்குவரத்தை நிர்வகிக்கின்றனர். சிறிது நேரம் வெயிலில் நிற்கின்றனர். சிறிது நேரம் நிழலில் ஓய்வெடுக்கின்றனர். அவ்வழியாக தள்ளுவண்டியில் வரும் மோர், பழச்சாறுகளை வாங்கி குடிக்கின்றனர்.மற்ற நேரங்களில் ஹெல்மெட் அணியாமல் செல்வோரும் கூட, தற்போது ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனத்தை ஓட்டி செல்கின்றனர்.ஐஸ்கிரீம் சாப்பிடக்கூடாது என்று கூறும் பெற்றோர், பெங்களூருக்கு சுற்றுலா வந்தவர்கள், தங்களின் குழந்தைகள் கேட்காமலேயே அவர்கள் மட்டுமின்றி தாங்களும் ஐஸ்கிரீம் வாங்கிசாப்பிட்டனர்.அடிக்கும் வெயிலுக்கு நுங்கு சாப்பிட வேண்டும் என்று தோன்றியது. நாங்கள் நண்பர்களாக வெளியே வந்தோம். ஒன்றாக நுங்கு சாப்பிட்டு கொண்டிருக்கிறோம். வெயிலுக்கு இதமாக இருக்கிறது.- ஜெகதீஷ், ஜிம் பயிற்சியாளர், மர்பிடவுன்.கரும்பு ஜூஸ் டேஸ்டாக உள்ளது. கிருஷ்ணர் கோவிலுக்கு பெற்றோருடன் சென்றிருந்தோம். வெயில் அதிகமாக இருந்ததால், என் இரு தங்கைகளுடன், கரும்பு ஜூஸ் குடித்தோம்.- மோனிஷா, 6ம் வகுப்பு, விமானபுரா.பள்ளி, கல்லுாரிகள் கோடை கால விடுமுறையால், அவர்களுடன் பெங்களூருக்கு சுற்றுலா வந்தோம். கத்திரி வெயில் துவங்கி உள்ளதால் வெப்பம் அதிகமாக உள்ளது. எனவே தான் இளநீர் குடிக்கிறோம். சூடாக இருந்த உடல், இளநீர் குடித்த பின், குளிர்ச்சியாக உணர்கிறோம்.- இந்திரா நாதன், திருப்பூர் - நமது நிருபர் -.