அனைத்து மாவட்டங்களிலும் ஏ.ஐ., கேமரா
பெங்களூரு: பெங்களூரை போன்று, கர்நாடகாவின் அனைத்து மாவட்டங்களிலும், சிக்னல்களில் ஏ.ஐ., எனப்படும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த போலீசார் திட்டமிட்டு உள்ளனர். இதுகுறித்து சாலை பாதுகாப்பு பிரிவு டி.ஜி.பி., பரசுராம் கூறியதாவது: பெங்களூரின் பல்வேறு இடங்களின் உள்ள சிக்னல்கள் மற்றும் சதுக்கங்களில், ஏ.ஐ., கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. போலீசார் இல்லையென்றாலும் வாகன பயணியர் போக்குவரத்து விதிகளை பின்பற்றுகின்றனரா என்பதை, இந்த கேமராக்கள் கண்காணிக்கும். கேமராக்கள் இருப்பதால், வாகன பயணியரும் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவர். சிக்னலை ஜம்ப் செய்தால், சீட் பெல்ட், ஹெல்மெட் அணியாவிட்டால், அதிவேகம், வாகனம் ஓட்டும் போது மொபைல் போன் பயன்படுத்துவது உட்பட மற்ற விதிமீறல்கள் நடந்தால், கேமராக்கள் கண்காணித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு, சம்பந்தப்பட்ட வாகனங்களின் பதிவு எண்ணுடன் தகவல் அனுப்பும். இதன் அடிப்படையில் போலீசார், வாகன ஓட்டிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி, அபராதம் விதிப்பர். போக்குவரத்து போலீசாருக்கு அஞ்சாதவர்களும், ஏ.ஐ., கேமராக்களுக்கு பயப்படுகின்றனர். எனவே, பெங்களூரை போன்று, மற்ற மாவட்டங்களிலும் இத்தகைய கேமராக்கள் பொருத்த, போலீஸ் துறை முடிவு செய்துள்ளது. பெரும்பாலும் விபத்துகள் நடக்க, போக்குவரத்து விதிகள் மீறப்படுவதே முக்கிய காரணமாகும். இதைத்தடுக்கும் நோக்கில், அந்தந்த மாவட்டங்களில், முக்கியமான சதுக்கங்களில் ஏ.ஐ., கேமராக்கள் பொருத்தப்படும். முதற்கட்டமாக பல்லாரி, மைசூரு, உடுப்பி, பெங்களூரு ரூரல், பெலகாவி, தார்வாட் உட்பட, 18 மாவட்டங்களில், கேமரா பொருத்தும் பணிகள் முடிந்துள்ளன. மற்ற மாவட்டங்களில் கேமரா பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன. கேமரா பொருத்தும் திட்டத்துக்காக, மாவட்டத்துக்கு தலா ஐந்து கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இதனால், சாலைகளில் விபத்துகள் எண்ணிக்கை குறையும். போக்குவரத்து விதிமுறைகளை மதிக்கும்படி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.