எலக்ட்ரானிக் சிட்டியில் அமைகிறது ஏ.ஐ., மையம்
பெங்களூரு: எலக்ட்ரானிக் சிட்டியில் ஏ.ஐ., மையம் அமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளதாக, ஐ.டி.பி.டி., துறை அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்து உள்ளார். இதுகுறித்து, நேற்று அவர் அளித்த பேட்டி: கர்நாடகா தொழில்நுட்ப முன்னேற்றத்தில் முன்னணியில் உள்ளது. ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவத்தை உணர்ந்து மாநில அரசு தொழில்நுட்ப துறையில் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் ஏ.ஐ., சிறப்பு மையம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. இதற்காக, 100 கோடி ரூபாயில் திட்டம் தயாராக உள்ளது. இது, அரசு - தனியார் இணைந்து செய்யும் திட்டமாகும். இதில், 49 கோடி ரூபாயை மாநில அரசும்; 51 கோடி ரூபாயை தனியார் நிறுவனங்களும் வழங்கும். இவ்வாறு அவர் கூறினார்.