உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  குடும்ப பிரச்னைகளை தீர்க்கும் புராதன உமா மஹேஸ்வரி கோவில்

 குடும்ப பிரச்னைகளை தீர்க்கும் புராதன உமா மஹேஸ்வரி கோவில்

- நமது நிருபர் - கர்நாடகாவின் பீதர் மாவட்டம், வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டம். ஆனால், இங்குள்ள கோட்டைகள், புராதன கோவில்கள், சுற்றுலா தலங்கள் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கின்றன. பீதரில் உள்ள கோவில்களில், உமா மஹேஸ்வரி கோவில் மிகவும் பிரபலமானது மற்றும் புராதனமானது. மாவட்டத்தின் பசவ கல்யாணா தாலுகாவில் உள்ள இக்கோவில், சாளுக்ய மன்னரான ஆறாவது விக்ரமாதித்யா கட்டியதாகும். அற்புதமான கட்டட கலைக்கு பெயர் பெற்றது. கோவிலின் கோபுரத்தை பார்த்தாலே போதும். மன்னராட்சி காலத்தில் இருந்த கட்டடக்கலை வல்லுநர்களின் அற்புதமான கலைத்திறனை தெரிந்து கொள்ளலாம். இக்கோவிலை சுற்றிலும் நீலகண்டர் கோவில், மஹாதேவா, பார்வதி, விநாயகர் கோவில்கள் உள்ளன. அனைத்து கோவில்களை சுற்றிலும், கலை நுணுக்கங்கள் உடைய சிற்பங்கள் உள்ளன. ஒரு முறை சிற்பங்களை பார்த்தால், கண்களை எடுக்கவே முடியாது. பார்த்து கொண்டே இருக்கலாம் என்றே தோன்றும். மஹாதேவா கோவிலின் பின் பகுதியில், பார்வதி கோவில் உள்ளது. உகாதி பண்டிகை நாளில் சூரிய கதிர்கள், கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் மீது விழுவதை காணலாம். இது உமா மஹேஸ்வரி கோவிலின் மற்றொரு சிறப்பாகும். கோவில் கர்நாடக தொல்பொருள் துறையின் பராமரிப்பில் உள்ளது. வெளிமாவட்டங்கள் மற்றும் மற்ற மாநிலங்களில் இருந்தும், பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகின்றனர். செவ்வாய், வெள்ளிகிழமைகள், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் அதிகமான பக்தர்கள் வருகின்றனர். குடும்பத்தில் பிரச்னைகள் இருந்தால், திருமணம் தடைபட்டால், தம்பதிக்கு இடையே ஒற்றுமை இல்லாவிட்டால், உமா மஹேஸ்வரியை தரிசனம் செய்தால் போதும். அனைத்து கஷ்டங்களும் நிவர்த்தியாகும். வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எனவே, அதிகமான பக்தர்கள் வருகின்றனர்.

எப்படி செல்வது?

பெங்களூரில் இருந்து, 600 கி.மீ., கலபுரகியில் இருந்து 80 கி.மீ., பெலகாவியில் இருந்து, 429 கி.மீ., பீதரில் இருந்து, 80 கி.மீ., தொலைவில் பசவ கல்யாணா நகரம் உள்ளது. அனைத்து முக்கிய நகரங்களில் இருந்து, பசவ கல்யாணாவுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. தனியார் பஸ் வசதியும் உள்ளது. பஸ் அல்லது ரயிலில் செல்வோர், பசவகல்யாணாவில் இறங்கி, வாடகை வாகனங்களில் கோவிலுக்கு செல்லலாம். விமானத்தில் வருவோர் கலபுரகி விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து கோவிலுக்கு செல்ல வாடகை வாகனங்கள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ