ஜாதிவாரி கணக்கெடுப்பு பணி ஆஷா ஊழியர்கள் புறக்கணிப்பு?
பெங்களூரு : 'ஜாதிவாரி கணக்கெடுப்பு பணியில் பங்கேற்க வேண்டாம்' என, 'ஆஷா' ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். கர்நாடக மக்களின் ஜாதி, கல்வி, பொருளாதார சூழ்நிலை குறித்து, பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் ஆணையம் சார்பில், கணக்கெடுப்பு நடத்த அரசு முடிவு செய்துள்ளது. வரும் 22 முதல், அக்டோபர் 7ம் தேதி வரை கணக்கெடுப்பு நடக்கவுள்ளது. இந்த பணிக்கு ஆசிரியர்கள், 'ஆஷா' ஊழியர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர். தசரா விடுமுறை வேளையில் கணக்கெடுப்புக்கு தங்களை பயன்படுத்துவதற்கு ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதே போன்று, 'ஆஷா' ஊழியர்களும் கணக்கெடுப்பில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளனர். இதற்கு முன்பு நடத்தப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு, வாக்குறுதி திட்டங்கள் உட்பட, பல்வேறு ஆய்வுகளுக்கும் ஆஷா ஊழியர்கள் பயன்படுத்தப்பட்டனர். ஆனால் அதற்கான ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. 'முந்தைய பாக்கி ஊதியம் வழங்குவது, இம்முறை ஆய்வுக்கு கூடுதல் ஊதியம் நிர்ணயிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்றினால் மட்டுமே, வரும் 22ம் தேதி துவங்கும் கணக்கெடுப்பில் பங்கேற்போம்' என, ஆஷா ஊழியர்கள் கூறியுள்ளனர்.