உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  நாடோடி சமூகத்தில் முதல் வக்கீலான அருணா 

 நாடோடி சமூகத்தில் முதல் வக்கீலான அருணா 

நாடோடி சமூகத்தினர் என்றால், நிலையான இருப்பிடம் இன்றி ஊர், ஊராக சுற்றித்திரிபவர்கள்; ஆங்காங்கே குடிசை அமைத்து வாழ்பவர்கள்; ஊசி, பாசி விற்பனை செய்து பிழைப்பு நடத்து பவர்கள் என்று தான் நமக்கு தெரியும். ஆனால், இச்சமூகத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வக்கீலா கி சாத னை படைத்து உள்ளார். மைசூரு டவுன் ஏக்லவ்யா நகரில் வசிக்கும் வெங்கடேஷ் - மஞ்சுளா தம்பதியின் மகள் அருணா, 25; வக்கீலாக உள்ளார். கர்நாடகாவின் நாடோடி சமூகத்தின் முதல் பெண் வக்கீல் இவர் தான் என்பது பெருமைக்குரிய விஷயமாகும். தற்போது மைசூரு பெண் வக்கீல், ஷில்பா ஹிரேமத்திடம் ஜூனியராக உள்ளார். இதுகுறித்து அருணா கூறியதாவது: நாடோடி சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், சிறுவயதில் இருந்தே தீண்டாமை, சமத்துவமின்மையை பார்த்து வளர்ந்து இருக்கிறேன். இதனை போக்க நன்றாக படிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஒன்றாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும் போது, குடிசை வீட்டில் தான் வசித்தோம். அந்த வீட்டில் மின்சாரம் கூட இல்லை. மண்ணெண்ணெய் விளக்கின் துணையுடன் தான் படித்தேன். பி.யு., முதலாம் ஆண்டு படிக்கும் போது தான், அரசு திட்டத்தின் கீழ் கிடைத்த வீட்டிற்கு சென்றோம். பி.யு., முடித்த பின், மஹாராணி கலை கல்லுாரியில் பி.ஏ., பட்டப்படிப்பு முடித்தேன். இதையடுத்து மைசூரு சட்ட கல்லுாரியில் சேர்ந்து, கடந்த ஆண்டு சட்ட படிப்பை முடித்தேன். துவக்கப்பள்ளி முதல் சட்ட கல்லுாரி வரை கன்னட மொழியில் பயின்று உள்ளேன். நான் சிறுமியாக இருந்த போது, ஒரு வழக்கு தொடர்பாக என் தாத்தாவை, நீதிமன்றத்திற்கு அடிக்கடி அலைய வைத்தனர். அவர் என்னிடம் பேசும் போது, நீ வக்கீலாக இருந்திருந்தால், இந்த தாத்தாவை காப்பாற்றி இருப்பாய் என்று கூறினார். தாத்தாவும், அப்பாவும் கூறியபடி, சட்டப்படிப்பை தேர்ந்து எடுத்தேன். என் கல்விக்காக எந்த அமைப்பும் உதவி செய்யவில்லை. அப்பா ஆட்டோ ஓட்டி என்னை படிக்க வைத்தார். சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு, என் வாதத்தின் மூலம் நியாயம் பெற்று தர வேண்டும் என்பதே என் குறிக்கோள். உயர் நீதிமன்ற நீதிபதியாக வேண்டும் என்பதே என் லட்சியம். அதற்காக படித்து வருகிறேன். சமீபத்தில் சிவில் நீதிபதி பதவிக்கு தேர்வு நடந்தது. இத்தேர்வில் பங்கேற்க, குறைந்தது மூன்று ஆண்டுகளாவது பயிற்சி வக்கீலாக இருந்திருக்க வேண்டும் என்பதால், என்னால் அந்த தேர்வை எழுத முடியாமல் போய் விட்டது. என் சமூகத்தில் நான் தான் முதல் பெண் வக்கீல் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி