எஸ்.ஐ.ஆர்., பணியில் அடாவடி அரசு ஊழியர் மீது தாக்குதல்
டி.ஜே.ஹள்ளி: எஸ்.ஐ.ஆர்., பணியின் போது படிவங்களை வழங்க மறுத்த அரசு ஊழியரை தாக்கிய, இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடக்கின்றன. பெங்களூரு டி.ஜே.ஹள்ளி ரோஷன் நகரில் நேற்று முன்தினம் மதியம் அரசு ஊழியரான பக்கீரப்பா, 40, என்பவர், எஸ்.ஐ.ஆர்., பணியில் ஈடுபட்டார். வீடு, வீடாக சென்று படிவங்கள் விநியோகம் செய்தார். அங்கு வந்த இரண்டு வாலிபர்கள், 'எங்கள் வீடு ஜெயநகரில் உள்ளது. எங்களுக்கும் எஸ்.ஐ.ஆர்., படிவம் கொடுங்கள்' என்று கேட்டனர். 'உங்கள் பகுதி ஓட்டுச்சாவடி நிலை அலுவலரிடம் சென்று கேளுங்கள்' என, பக்கீரப்பா பதில் கூறினார். இதனை ஏற்க மறுத்த வாலிபர்கள், பக்கீரப்பாவுடன் தகராறு செய்து அவரை தாக்கினர். இதில் அவரது வாயில் இருந்து ரத்தம் வழிந்தது. அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் அளித்த புகாரில் டி.ஜே.ஹள்ளி போலீசார், யாரப், 25, தஸ்தகீர், 26, ஆகிய இருவரை கைது செய்தனர்.