மீண்டும் சாலைக்கு வந்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் பனானா பேப ி யானை
சாம்ராஜ்நகர்: மூன்று மாதங்களாக காணாமல் போயிருந்த, 'பனானா பேபி' யானை, நெடுஞ்சாலையில் நடமாடி லாரி உள்ளிட்ட வாகன ஓட்டுநர்களுக்கு தொல்லை தரத் துவங்கியுள்ளது. சாம்ராஜ்நகர் மாவட்டத்தில், காட்டு யானைகளின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வனப்பகுதியில் இருந்து சாலைக்கு வரும் யானைகள், காய்கறிகள் ஏற்றிச் செல்லும் லாரிகளை தடுத்து நிறுத்தி, காய்கறிகளை தின்கின்றன. சாம்ராஜ்நகர் மாவட்டத்தின் புனஜநுாரு கிராமம் அருகேயுள்ள நெடுஞ்சாலையில், காட்டு யானை ஒன்று வாழைப்பழ லாரிகளை மட்டுமே குறிவைக்கும். வாழை குலைகள் ஏற்றிய லாரிகளை கண்டால் வழிமறித்து நிறுத்தும். வயிறுமுட்ட வாழைப்பழங்களை தின்ற பின்னரே, அங்கிருந்து செல்லும். அதனால் தான், இந்த யானையை, 'பனானா பேபி' என்ற பெயரில் அழைக்கின்றனர். கடந்த மூன்று மாதங்களாக, பனானா பேபி யானை தென்படவில்லை. நேற்று அதிகாலை திடீரென பனானா பேபி யானை, உணவு தேடி சாலைக்கு வந்து, வாகன பயணியருக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. வைக்கோல் சுமந்து சென்ற லாரியில் இருந்து, வைக்கோலை எடுத்து தின்றது. இதைக்கண்ட வாகன பயணியர், தங்களின் மொபைல் போனில் வீடியோ பதிவு செய்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.