யாத்கிர் ரசாயன தொழிற்சாலைகளில் வங்கதேசத்தினர்... ஊடுருவல்? போலீசார் கண்டுகொள்வதில்லை என மக்கள் அதிருப்தி
வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவும் அந்நாட்டு மக்கள், நம் நாட்டின் பல பகுதிகளில் சட்ட விரோதமாக குடியேறுகின்றனர்.இதுபோன்று பெங்களூரு உட்பட கர்நாடகாவின் பல மாவட்டங்களில் குடியேறி உள்ளனர். இவர்களை கண்டுபிடித்து, அவர்களின் நாடுகளுக்கு அனுப்பி வைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.'பெங்களூரின் மஹாதேவபுரா, கே.ஆர்.,புரம், பெங்களூரு தெற்கு, மாரத்தஹள்ளி ஜங்ஷன், ஜக்கசந்திரா ஜங்ஷன், குந்தலஹள்ளி கேட், முன்னேனகோலலு, காடூபீசனஹள்ளி, தேவரபீசனஹள்ளி, ஹூலிமாவு.' சிக்க பேகூர் ஆகிய பகுதிகளில் போலி ஆவணங்களை வைத்து, கடந்த 13 ஆண்டுகளில் 50,000 வங்கதேசத்தினர் குடியேறி உள்ளனர்' என்று உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், மாநில போலீஸ் டி.ஜி.பி., அலோக் மோகனிடம், பா.ஜ., முன்னாள் கவுன்சிலர் ரமேஷ் புகார் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்நிலையில், யாத்கிர் மாவட்டம், கடேசுரு படியாலா தொழிற் பகுதியில், 20 ரசாயன தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன், 14, 17 வயதுடைய சிறுவர்கள் தீக்காயத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.அவர்களிடம் டாக்டர்கள் விசாரித்த போது, ரசாயன தொழிற்சாலையில் பணியின் போது தீக்காயம் ஏற்பட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக குழந்தை தொழிலாளர் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர்.அங்கு வந்த அதிகாரிகள், சிறுவர்களிடம் விசாரித்த பின், சம்பந்தப்பட்ட ரசாயன தொழிற்சாலை மீது, போலீசில் புகார் அளித்தனர். அங்கு பணியாற்றி வந்த சிறுவர்கள், குழந்தைகள் நல மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சந்தேகம்
அத்துடன் இங்கு பீஹார், மேற்குவங்கம் உட்பட வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, வங்கதேசத்தினரும் பணியாற்றி வரலாம் என்று அப்பகுதி மக்கள் சந்தேகம் அடைந்தனர். இது குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவித்து உள்ளனர். அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்று அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.இது குறித்து, குழந்தைகள் மீட்பு குழு அதிகாரிகள் கூறியதாவது:தொழிற்சாலைகளுக்கு குழந்தைகளை பணியமர்த்துவது மட்டுமின்றி, சட்ட விரோதமாக குடியேறிய வங்கிதேசத்தினரும் பணியில் சேருகின்றனர். இங்குள்ள தொழிற்சாலைகளில் 12க்கும் மேற்பட்ட வங்கதேசத்தினர் இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.'ரெய்டு' நடத்த சென்றால், எங்களை உள்ளே அனுமதிப்பதில்லை. நிறுவன உரிமையாளரிடம் அனுமதி பெற வேண்டும் என்று கூறி, எங்களை திட்டி அனுப்பி விடுவர்.ஆபத்தான ரசாயன தொழிற்சாலைகள் குறித்து அறிந்த உள்ளூர் மக்கள் பணி செய்ய விரும்புவதில்லை. இதனால் தொழிற்சாலை நிர்வாகத்தினர், கான்ட்ராக்டர்களை பயன்படுத்தி வட மாநிலத்தை சேர்ந்தவர்களை பணிக்கு அழைத்து வருகின்றனர்.இவர்கள், குறைந்த சம்பளத்தில், கடுமையான பணி செய்ய தயாராக உள்ளனர். இவ்வாறு அழைத்து வருவோரின் விபரங்கள் எதையும் பார்க்க மாட்டார்கள். 6 மாதங்கள்
தொழிலாளர்களின் விபரங்களை வழங்கும்படி தொழிலாளர் நலத் துறையினர் அல்லது மாவட்ட நிர்வாகத்தினர் கேட்டாலும் தரமாட்டார்கள். ஒப்பந்த ஊழியர்களாக அவர்களை நியமித்து கொண்டு, ஆறு மாதம் அல்லது ஓராண்டு வரை அவர்களை பணியில் வைத்திருந்த பின், அவர்களை அனுப்பி விடுவர்.அவ்வாறு செல்வோரிடம் ஏன் செல்கிறீர்கள் என்று கேட்டால், இம்மாவட்டத்தின் சீதோஷ்ணம் தங்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்று கூறுவர். ஆனால், மீண்டும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் இதே தொழிற்சாலையில் பணியில் சேருகின்றனர்.இங்குள்ள தொழிற்சாலைகள் மிகவும் ஆபத்தானவை. இதில் கசிவு ஏற்பட்டு, காற்றில் கலந்தால், பேராபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இங்கு பணியாற்றும் ஊழியர்கள் எங்கிருந்து வருகின்றனர். அவர்களின் குடும்பத்தினர் எங்கே உள்ளனர். இவர்களின் பின்னணி என்ன. நம் நாட்டை சேர்ந்தவர்களா அல்லது வெளிநாட்டை சேர்ந்தவர்களா. அவர்கள் மீது குற்ற வழக்கு உள்ளதா என்று எதுவும் தெரியவில்லை.தொழிற்சாலையில் ஐந்து முதல் ஆறு ஆண்டுகள் வரை பணியாற்றும் தொழிலாளர்களின் ஆதார் அடையாள அட்டை வழங்கும்படி கேட்டால், தருவதில்லை. நேரில் சென்று கேட்டால், அதிகாரம் மிக்கவர்கள் எங்களை தொடர்பு கொண்டு அங்கிருந்து புறப்படும்படி கூறுகின்றனர்.சிலரின் ஆதார் அட்டைகளை மட்டும் வழங்குகின்றனர். ஆனால், அதிலும் தில்லுமுல்லு செய்துள்ளது தெரிந்தது. தொழிலாளர் நலத்துறையினர் விழித்து கொள்ளவில்லை என்றால், பேராபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு ஏற்பது.இவ்வாறு அவர்கள் கூறினர்.