| ADDED : நவ 21, 2025 06:20 AM
தங்கவயல்: ''தங்கவயல் நகராட்சிக்கு, பெமல் நிறுவனம் 27 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது. இதை வசூலிப்பதற்கு கடிதம் அனுப்பப்படும்,'' என, கோலார் மாவட்ட கலெக்டர் எம்.ஆர்.ரவி தெரிவித்தார். தங்கவயல் நகராட்சி நிர்வாக அதிகாரியான, கோலார் கலெக்டர் எம்.ஆர்.ரவி நேற்று நகராட்சி அலுவலகத்தில் ஆய்வு செய்தார். பின் அவர் அளித்த பேட்டி: தங்கவயல் நகராட்சியில் வரி வசூல் 92 சதவீதம் முடிந்துள்ளது. இன்னும் 8 சதவீதம் வசூலிக்க வேண்டும். தங்கச் சுரங்க நிறுவனத்திடமும் பாக்கி உள்ளது. பெமல் தொழிற்சாலை 27 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது. நகராட்சி வருமானத்தில் 50 சதவீதம் தொகை சுரங்க குடியிருப்பு பகுதியில் செலவழிக்கப்படுகிறது. சுரங்கத்தின் பாக்கி தொகையை வசூலிக்க வலியுறுத்தப்படும். தங்கவயலில் தெருநாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த சிறப்பு ஊசி செலுத்தப்படும். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தெரு நாய்களுக்கு காப்பகம் அமைக்கப்படும். குப்பையை கண்ட இடங்களில் கொட்டக் கூடாது. மீறினால் அபராதம் விதித்து வழக்கு பதிவு செய்யப்படும். வீடுதோறும் குப்பை சேகரிப்புக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். குப்பை சேகரித்து அதனை உரமாக்கி, விற்பனை செய்து, அதன் மூலம் வருமானம் கிடைக்க செய்யப்படும். தங்கவயலை பிளாஸ்டிக் இல்லா நகரம் ஆக்க முழு முயற்சி மேற்கொள்ளப்படும். பிளாஸ்டிக் மொத்த வியாபாரிகள் கண்காணிக்கப்படுவர். தங்கவயலில் பூங்காக்கள் சீரமைக்கப்படும். எஸ்.டி.பிளாக் பூங்காவை 3 கோடி ரூபாயிலும், கிங் ஜார்ஜ் ஹால் பூங்காவை 2 கோடியிலும் சீரமைக்கப்படும். அடிக்கடி தங்கவயல் நகருக்கு வருவேன்; நகரை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.