பெங்களூரு -- மும்பை அதிவேக ரயில் 30 ஆண்டுகளாக காத்திருப்புக்கு முடிவு?
பெங்களூரு: 'பெங்களூரு - மும்பை இடையே அதிவேக ரயில் இயக்கும் திட்டத்துக்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் இரண்டு நகர மக்களின் 30 ஆண்டு கோரிக்கை நிறைவேறியுள்ளது' என, பெங்களூரு தெற்கு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா தெரிவித்தார். இதுகுறித்து, 'எக்ஸ்' வலைதளத்தில் நேற்று அவர் கூறியதாவது: பெங்களூரு - மும்பை இடையே, விரைவில் அதிவேக ரயில் இயக்குவதாக, மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். பெங்களூரு, மும்பை என, இரண்டுமே முக்கியமான வர்த்தக நகரங்களாகும். இந்த நகரங்களின் ரயில் போக்குவரத்து திறன் விஸ்தரிக்கப்படுவதால், வர்த்தகம் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவுகிறது. பெங்களூரும், மும்பையும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பை அளிக்கின்றன. ஆனால் இவ்விரு நகரங்களுக்கு இடையே, வெறும் ஒரே ஒரு ரயில் இயக்கப்படுகிறது. பயண நேரமும் அதிகரிக்கிறது. அதிவேக ரயில் இயக்க வேண்டும் என, இரண்டு நகரங்களின் மக்களும் 30 ஆண்டுகளாக வேண்டுகோள் விடுத்து வந்தனர். அவர்களின் வேண்டுகோள் இப்போது நிறைவேறுகிறது. கடந்த ஆண்டு மட்டுமே, பெங்களூரு மற்றும் மும்பை இடையே, 26 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விமானத்தில் பயணம் செய்துள்ளனர். புதிதாக அதிவேக ரயில் போக்குவரத்து துவங்கினால், பொது மக்களுக்கு உதவியாக இருக்கும். கைக்கெட்டும் கட்டணத்தில் பயணம் செய்யலாம். அதிவேக ரயில் இயக்குவது குறித்து, நான்கு ஆண்டுகளாக லோக்சபாவில், பொது கணக்கு தணிக்கை கமிட்டி கூட்டங்கள், ரயில்வே அதிகாரிகளுடன் தொடர் ஆலோசனை கூட்டங்கள் நடத்தியதற்கு, பலன் கிடைத்துள்ளது. புதிய ரயில் இயக்கினால், பயணியர் நெருக்கடியை குறைக்கலாம். பஸ் மற்றும் விமானத்துக்கு மாற்றாக இருக்கும். இரண்டு நகரங்கள் இடையிலான நல்லுறவை பலப்படுத்தும். கர்நாடக மக்களின் நீண்ட கால கனவை, நனவாக்கிய பிரதமர் நரேந்திர மோடி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா ஆகியோருக்கு, மக்களின் சார்பில் நன்றி. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.