உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  சைபர் குற்ற வழக்குகளில் பெங்களூருக்கு முதலிடம்

 சைபர் குற்ற வழக்குகளில் பெங்களூருக்கு முதலிடம்

பெங்களூரு: சைபர் குற்ற வழக்குகள் எனும், இணையதளங்கள் வழியாக நடத்தப்படும் குற்ற வழக்குகளில், இந்தியாவிலேயே பெங்களூரு முதல் இடத்தை பிடித்துள்ளது. இக்குற்றங்கள், நாளுக்கு நாள் அதிகரிப்பதை, என்.சி.ஆர்.பி., எனும் தேசிய குற்ற ஆவண பதிவகத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது குறித்து, என்.சி.ஆர்.பி., வெளியிட்டுள்ள அறிக்கை: நாட்டின் பல்வேறு மாநிலங்களில், 2024ல், பதிவான சைபர் குற்ற வழக்குகளை ஆய்வு செய்து, அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில், 34,958 சைபர் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில் பெங்களூரில் மட்டுமே, 17,561 வழக்குகள் பதிவாகியுள்ளன. பெங்களூருக்கு அடுத்த இடங்களில் ஹைதராபாத், சென்னை, புனே, லக்னோ நகரங்கள் உள்ளன. கர்நாடகாவில் 2024ல், 21,993 சைபர் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. 2023ம் ஆண்டு, 21,889 வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த புள்ளிவிபரங்களை கவனித்தால், மாநிலத்தில் சைபர் குற்றங்கள், ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பது உறுதியாகிறது. கடந்த, 2023ல் பெங்களூரில், 17,631 சைபர் குற்ற வழக்குகள் பதிவாகின. 2024ம் ஆண்டில், 17,561 வழக்குகள் பதிவாகின. இவற்றில் 3,632 வழக்குகள் முடிந்துள்ளன. மற்ற வழக்குகள் விசாரணை கட்டத்தில் உள்ளன. கடந்த, 2024ல், 5,096 சைபர் குற்றவாளிகள், தண்டனைக்கு ஆளாகியுள்ளனர். கர்நாடகாவில் பதிவாகும் மொத்த சைபர் குற்ற வழக்குகளில், 75 சதவீதம் பெங்களூரை சேர்ந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பெங்களூரு உயரதிகாரிகள் கூறியதாவது: பெங்களூரு உட்பட, மாநிலத்தின் பல்வேறு நகரங்களில், போலீசாரின் கடுமையான நடவடிக்கையால், சைபர் குற்றங்கள் குறித்து, விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. சைபர் குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டால், தயங்காமல் புகார் அளிக்கின்றனர். இதனால் பதிவாகும் வழக்குகள் எண்ணிக்கை அதிகரிக்கின்றன. மக்களின் வசதிக்காக, பெங்களூரில், 11 சிறப்பு சைபர் போலீஸ் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. வழக்குகள் எண்ணிக்கை அதிகரிக்க, இதுவும் காரணமாக இருக்கலாம். அது மட்டுமின்றி, ஆன்லைன் வழியாகவும் புகார் அளிக்கும் வசதியும் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !