பீதர் நகர பஸ் நிலையம் அசுத்தம் மகளிர் ஆணைய தலைவி அதிருப்தி
பீதர்: 'கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் நிலையம், ஏன் இவ்வளவு அசுத்தமாக இருக்கிறது?' என, கர்நாடக மகளிர் ஆணைய தலைவி நாகலட்சுமி சவுத்ரி கேள்வி எழுப்பினார். மாநில மகளிர் ஆணைய தலைவி நாகலட்சுமி சவுத்ரி, நேற்று காலை பீதர் நகர கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் நிலையத்துக்கு, திடீர் வருகை தந்து ஆய்வு செய்தார். அப்போது பஸ் நிலையம், மிகவும் அசுத்தமாக இருப்பதை கண்டு, அதிருப்தி அடைந்து, அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். அவர் கூறியதாவது: பஸ் நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணியர் வந்து, செல்கின்றனர். பஸ் நிலையம் ஏன் இவ்வளவு அசுத்தமாக உள்ளது? கழிப்பறை சுத்தமாக இல்லை. கழிப்பறையை சுத்தம் செய்ய, துடைப்பத்தை தவிர, பினாயில், ஆசிட் என, எதுவுமே இல்லை. கழிப்பறையை சுத்தம் செய்வோருக்கு, பாதுகாப்பு சாதனமும் தரப்படவில்லை. ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்களை நியமித்தாலும், அவர்களின் வங்கிக் கணக்கில் ஊதியத்தை செலுத்த வேண்டும். பயணியரின் வசதிக்காக, குடிநீர் மையம் உள்ளது. ஆனால் அதை சரியாக பராமரிக்காததால், குடிநீர் மையம் மூடப்பட்டுள்ளது. தனியார் கடைகளுக்கு சென்று, பயணியர் பாட்டில் நீர் வாங்கும் சூழ்நிலை உள்ளது. பஸ் நிலையத்தில் வெறும் இரண்டு கண்காணிப்பு கேமராக்கள் மட்டுமே உள்ளன. அந்த கேமராக்கள் எங்குள்ளன என்பதே தெரியவில்லை. பச்சிளம் குழந்தைகளுக்கு, தாய்மார்கள் பாலுாட்ட தனியறை உள்ளது. அதுவும் சுத்தமாக இல்லை. அறையில் துாசி படிந்துள்ளது. தாய்மார்கள் எங்கு சென்று, குழந்தைகளுக்கு பாலுாட்டுவது. பஸ் நிலையத்தை சுத்தமாக, சுகாதாரமாக வைத்திருங்கள். இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.