உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஜாதிவாரி சர்வேயில் நாளுக்கு நாள் குழப்பம் பா.ஜ., தலைவர் விஜயேந்திரா ஆதங்கம்

ஜாதிவாரி சர்வேயில் நாளுக்கு நாள் குழப்பம் பா.ஜ., தலைவர் விஜயேந்திரா ஆதங்கம்

பெங்களூரு : ''ஜாதிவாரி சர்வேயில் நாளுக்கு, நாள் குழப்பம் நிலவுகிறது,'' என்று, பா.ஜ., தலைவர் விஜயேந்திரா ஆதங்கம் தெரிவித்து உள்ளார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: ஜாதிவாரி சர்வே நடத்துவது பற்றி, அரசிடம் சரியான திட்டமிடல் இல்லை. யாரோ ஒருவரின் அழுத்தத்தின் கீழ், பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் செயல்படுகிறது. சர்வேயின் போது கேட்கப்படும் கேள்விகள் அதிகமாக இருப்பதாக, துணை முதல்வர் சிவகுமார் ஆட்சேபனை தெரிவித்து உள்ளார். சர்வேயில் ஈடுபடும் ஊழியர்கள் பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். மாற்றுத்திறனாளிகளை கூட சர்வே எடுக்க பயன்படுத்துகின்றனர். ஹாசனில் சர்வே எடுக்க சென்ற ஊழியர்களை, தெருநாய்கள் கடித்து உள்ளன. சர்வேயில் நாளுக்கு, நாள் குழப்பம் நிலவுகிறது. நாங்கள் ஏதாவது பேசினால், பா.ஜ., பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரானது என்று, முதல்வர் சித்தராமையா கூறுகிறார். நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் பொருளாதாரம், கல்வி, சமூக நீதியை வழங்குவதில் பா.ஜ.,வுக்கு அதிக அர்ப்பணிப்பு உள்ளது. பா.ஜ., ஆட்சியில் எடியூரப்பா முதல்வராக இருந்த போது, வால்மீகி ஜெயந்திக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. எங்கள் ஆட்சியில் வால்மீகி பழங்குடியினர் மேம்பாட்டு ஆணையம் நிறுவப்பட்டு, வால்மீகி சமூக இளம் தலைமுறையினர் பொருளாதார ரீதியாக முன்னேற பல திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், காங்கிரஸ் அரசு வால்மீகி மேம்பாட்டு ஆணையத்திற்கு ஒதுக்கப்பட்ட பணத்தை கொள்ளையடித்து உள்ளது. வால்மீகி சமூக மடங்களுக்கு அதிக நிதி ஒதுக்கியதும், பா.ஜ., ஆட்சியில் தான். ஓட்டுக்காக மட்டும் வால்மீகி சமூகத்தை பற்றி காங்கிரஸ் கவலை கொள்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ