உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  எஸ்.ஐ.ஆர்., பணியில் அதிக கவனம் பா.ஜ., தலைவர் விஜயேந்திரா அறிவிப்பு

 எஸ்.ஐ.ஆர்., பணியில் அதிக கவனம் பா.ஜ., தலைவர் விஜயேந்திரா அறிவிப்பு

பெங்களூரு: ''எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியில், அதிக கவனம் செலுத்துவோம்,'' என்று, கர்நாடக பா.ஜ., தலைவர் விஜயேந்திரா அறிவித்து உள்ளார். பெங்களூரில் அவர் அளித்த பேட்டி: காங்கிரஸ் அரசு செய்யும் தவறு என்ன; மாவட்ட அளவில் பா.ஜ., எவ்வளவு வலுவாக உள்ளது; பஞ்சாயத்து தேர்தல்களில் கட்சியை எப்படி வலுவாக முன்னெடுத்து செல்வது என்பது பற்றி விவாதிக்க, கடந்த, 5ம் தேதியில் இருந்து மாவட்ட பா.ஜ., தலைவர்கள் கூட்டங்களை நடத்துகிறோம். இதுவரை கட்சியின் அமைப்பு ரீதியாக, 35 மாவட்டங்களில் கூட்டங்கள் முடிந்து உள்ளன. அதிக கவனம் எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை நாங்கள் வரவேற்கிறோம். பிப்ரவரி அல்லது அதற்கு பின் கர்நாடகாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி நடக்கும். இதில், முறைகேடு நடக்காமல் தடுக்க, அதிக கவனம் செலுத்துவோம். இந்த பணியின் மூலம் பீஹாரில் 65 லட்சம்; உத்தர பிரதேச மாநிலத்தில் 2.50 கோடி போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். 'ஜி ராம் ஜி' சட்டத்தை பற்றி, காங்கிரஸ் தவறான தகவலை மக்களிடம் பரப்புகிறது. உண்மையை மக்களிடம் எடுத்து செல்வோம். சமீபத்தில் நடந்த கட்சியின் உயர்மட்ட குழு கூட்டத்தில், அரசுக்கு எதிராக செயல்படுவது பற்றி விவாதிக்கப்பட்டது. மாநிலத்தில் சட்டம் - - ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. இதற்கு பல்லாரி கலவரமே உதாரணம். வேண்டும் என்றே காங்கிரஸ் தொண்டர் ராஜசேகர் ரெட்டியை சுட்டுக் கொன்றனர். அவரது உடலை அவசர, அவசரமாக தகனம் செய்தனர். இரண்டு முறை பிரேத பரிசோதனை நடந்தததாகவும் எங்களிடம் தகவல் உள்ளது. கலவரம் தொடர்பாக, வரும், 17 ல் பல்லாரி டவுனில் போராட்டம் நடத்த உள்ளோம். அதற்கு பின், பாதயாத்திரையா அல்லது மாவட்டம் முழுதும் போராட்டமா என்பது பற்றி முடிவு செய்வோம். ஆறுதல் இல்லையே உத்தர கன்னடா எல்லாபூரில் தலித் பெண் கொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்திற்கு மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஆறுதல் சொல்லவில்லை. அப்பெண்ணின் குடும்பத்திற்கு, 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். உயிருடன் இருக்கும் தலித் சமூகத்தை சேர்ந்த பெண் எம்.எல்.ஏ., பாகிரதி முருல்யா இறந்ததாக, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவில்லை. கர்நாடகாவில் தலித்துக்களுக்கு அநீதி நடக்கிறது. இதை பார்த்துக் கொண்டு நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ