உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பா.ஜ., தலைவர்கள் திடீர் ஆலோசனை எதிரெதிர் துருவங்கள் சந்திப்பால் பரபரப்பு

பா.ஜ., தலைவர்கள் திடீர் ஆலோசனை எதிரெதிர் துருவங்கள் சந்திப்பால் பரபரப்பு

பெங்களூரு: எம்.எல்.ஏ., அஸ்வத் நாராயணா வீட்டில், மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தலைமையில், பா.ஜ., முக்கிய தலைவர்கள் நேற்று நடத்திய திடீர் ஆலோசனை கூட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கர்நாடக பா.ஜ., தலைவராக உள்ள விஜயேந்திராவை மாற்றியே தீர வேண்டும் என்று, அவரது எதிரணியினர் தீவிரமாக வேலை செய்கின்றனர். மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணாவை, புதிய தலைவர் ஆக்க வேண்டும் என்பது அவர்களின் நோக்கமாக உள்ளது.இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில், கடந்த நான்கு நாட்களாக எதிர்க்கட்சித் தலைவர் அசோக் டில்லியில் முகாமிட்டு உள்ளார். விஜயேந்திராவும் டில்லி சென்றுவிட்டுத் திரும்பினார்.கர்நாடக பா.ஜ.,வில் ஏற்பட்டுள்ள குழப்பங்களை சரி செய்யும் பொறுப்பு, மத்திய உணவு அமைச்சர் பிரஹலாத் ஜோஷிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பெங்களூரு டாலர்ஸ் காலனியில் உள்ள மல்லேஸ்வரம் எம்.எல்.ஏ., அஸ்வத் நாராயணாவின் வீட்டில் நேற்று மாலை பிரஹலாத் ஜோஷி தலைமையில் திடீர் ஆலோசனை கூட்டம் நடந்தது.மாநிலத் தலைவர் விஜயேந்திரா, எம்.பி., கோவிந்த் கார்ஜோள், எம்.எல்.ஏ., சுனில்குமார், எம்.எல்.சி., ரவி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் விஜயேந்திரா எதிர்ப்பு அணியில் உள்ள, அரவிந்த் லிம்பாவளியும் கலந்து கொண்டார். அவரை, விஜயேந்திரா கைகுலுங்கி வரவேற்றார்.ஆலோசனை முடிந்ததும் வெளியே வந்த அரவிந்த் லிம்பாவளி ஊடகத்தினரிடம் எதுவும் பேசாமல், காரில் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.விஜயேந்திரா, ரவி ஆகியோர் கூறுகையில், 'மாநில தலைவர் பதவி குறித்து எந்த விவாதமும் நடக்கவில்லை. காங்கிரஸ் அரசு செய்யும் தவறுகளை கண்டித்து, அனைவரும் ஒருங்கிணைந்து போராடுவது குறித்து ஆலோசித்துள்ளோம்' என்றனர்.ஆனாலும் மாநில தலைவர் பதவி குறித்தே விவாதம் நடந்தது என்றும், பா.ஜ., தலைவராக விஜயேந்திரா நீடித்தால், அவருடன் இணைந்து அனைவரும் பணியாற்ற வேண்டும் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ