உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஹிந்து நாடார் சமுதாய மாணவர்களின் கல்விக்கு உதவி பா.ஜ., - எம்.பி., மோகன் தகவல்

 ஹிந்து நாடார் சமுதாய மாணவர்களின் கல்விக்கு உதவி பா.ஜ., - எம்.பி., மோகன் தகவல்

பெங்களூரு: ''கர்நாடக ஹிந்து நாடார் சமுதாய மாணவர்களின் கல்வி ஊக்கத்தொகையாக, என் எம்.பி., நிதியில் இருந்து உதவுகிறேன்,'' என, பெங்களூரு மத்திய பா.ஜ., - எம்.பி., மோகன் தெரிவித்தார். பெங்களூரு வசந்த் நகர் கர்நாடக மாநில பில்லியர்ட்ஸ் சங்கத்தில் கர்நாடக ஹிந்து நாடார் அசோசியேஷன் சார்பில் நேற்று காமராஜர் 124வது பிறந்த நாள் விழா நடந்தது. இந்துமதி இறைவணக்கம் பாடினார். அவரது படத்துக்கு பெங்களூரு மத்திய பா.ஜ., - எம்.பி., மோகன் மற்றும் சங்க நிர்வாகிகள் மலர் துாவி வணங்கினர். இதை தொடர்ந்து, பெங்களூரு தமிழ் சங்க காமராஜர் உயர் நிலைப்பள்ளி மாணவ - மாணவியருக்கு இலவச புத்தக பை வழங்கப்பட்டது. வரும் நாட்களில் அதே பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக நோட்டு புத்தகம் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. பின், மோகன் பேசுகையில், ''உங்கள் சமுதாய மாணவ - மாணவியருக்கு, கல்வி ஊக்கத்தொகை வழங்க தயாராக இருக்கிறேன். என் எம்.பி., நிதியில் இருந்து வேண்டிய உதவி செய்கிறேன். என்னை எப்போது வேண்டுமானாலும் சங்கத்தினர் தொடர்பு கொள்ளலாம்,'' என்றார். இவரை தொடர்ந்து சங்க தலைவர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பேசினர். மாணவர்களின் பரதநாட்டியம் உட்பட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கல்வி, விளையாட்டுகளில் சிறப்பாக செயல்பட்ட மாணவ - மாணவியருக்கு பரிசுகளும், ஷீல்டுகளும் வழங்கப்பட்டன. தொழிலதிபர் ராதாகிருஷ்ணன், பி.எஸ்.என்.எல்., உயர் அதிகாரி ஹேமா குருசாமி ஆகியோர் இச்சமுதாய மாணவ - மாணவியரின் கல்விக்காக தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கினர். இவர்களுக்கு முறையே 'கல்வித்தந்தை', 'கல்வித்தாய்' திட்டத்தின் கீழ் விருது வழங்கப்பட்டன. சங்கத்தின் டிஜிட்டல் 'கர்நாடக ஹிந்து நாடார் மலர்' வெளியிடப்பட்டது. சங்க தலைவர் கிருஷ்ணவேணி, செயலர் சசிகாந்த் சங்கரேஸ்வரன், பொருளாளர் ஜவஹர், தொழிலதிபர் ராதாகிருஷ்ணன், நிர்வாகி சுரேஷ் குமார், கர்நாடக தேவர் சங்க தலைவர் கனகராஜ், முதலியார் சங்கம் செயலர் லட்சுமணன், லயன்ஸ் பத்மநாபன், பெங்களரு தமிழ் சங்க செயலர் சம்பத், பெங்களூரு தமிழ் சங்க காமராஜர் உயர்நிலைப்பள்ளி தாளாளர் ராமசுப்பிரமணியன், வாசன் ஐ கேர் இயக்குனர் சுந்தர்ராம் மற்றும் அசோசியேஷன் உறுப்பினர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். நிகழ்ச்சியை மின்மினி, ஸ்ருதி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை