உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பா.ஜ., இளைஞர் அணி தலைவர் கொலை; பல்லாரி போலீசில் 4 வாலிபர்கள் சரண்

பா.ஜ., இளைஞர் அணி தலைவர் கொலை; பல்லாரி போலீசில் 4 வாலிபர்கள் சரண்

கொப்பால் : கங்காவதி பா.ஜ., இளைஞரணி தலைவர், அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக நான்கு வாலிபர்கள், போலீசில் சரண் அடைந்தனர். கொப்பால் கங்காவதி பா.ஜ., இளைஞரணி தலைவர் வெங்கடேஷ் குருபர், 31. நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு தேவி கேம்ப் பகுதியில் இருந்து, கங்காவதி நோக்கி பைக்கில் தனியாக சென்று கொண்டிருந்தார். பைக்கை பின்தொடர்ந்து ஆட்டோவில் வந்த நான்கு பேர், பைக்கை வழிமறித்தனர். வெங்கடேஷை பிடித்து சாலையில் தள்ளி அரிவாளால், சரமாரியாக வெட்டினர். சம்பவ இடத்திலேயே வெங்கடேஷ் இறந்தார். கொலையாளிகள் அங்கிருந்து தப்பினர். தகவல் அறிந்த கொப்பால் எஸ்.பி., ராம் அரசித்தி, கங்காவதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். வெங்கடேஷ் உடல், கங்காவதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு பா.ஜ., தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று காலை கங்காவதி எம்.எல்.ஏ., ஜனார்த்தன ரெட்டி, முன்னாள் எம்.எல்.ஏ., பாரண்ணா முனவள்ளி ஆகியோர் மருத்துவமனைக்கு வந்தனர். 'கொலையாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும்' என, ஜனார்த்தன ரெட்டி வலியுறுத்தினார். இந்நிலையில், வெங்கடேஷை கொலை செய்ததாக கூறி, பல்லாரி கம்ப்ளி போலீஸ் நிலையத்தில் நேற்று மாலை, கங்காவதியின் பரத், 25, சலீம், 24, விஜய், 24, தன்ராஜ், 25, ஆகிய நான்கு பேர் சரண் அடைந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர் . அவர்களிடம் நடத்திய விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது: வெங்கடேஷும், கங்காவதியை சேர்ந்த ரவுடி ரவியும் ஒரு காலத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். ரவிக்கும், வெங்கடேஷ் ஆதரவாளர் மாருதிக்கும், 2023ல் தகராறு ஏற்பட்டது. ரவி, அவரது ஆதரவாளர்கள், மாருதியை தாக்கி, அவரது தலையில் கல்லைப் போட்டனர். சிகிச்சையில் அவர் பிழைத்தார். இந்த வழக்கில் ரவி, அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பதுங்கி இருந்த இடம் பற்றி போலீசாருக்கு, வெங்கடேஷ் துப்பு கொடுத்தார். அப்போது முதல் வெங்கடேஷுக்கும், ரவிக்கும் விரோதம் ஏற்பட்டது. ஜாமினில் வந்த ரவி, வெங்கடேஷை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினார். இதன்படி, நேற்று அதிகாலை தனியாக பைக்கில் சென்ற, வெங்கடேஷை, தன் கூட்டாளிகளை ஏவி, ரவி கொலை செய்தது தெரிய வந்துள்ளது. தலைமறைவாக உள்ள ரவி, அவரது கூட்டாளி கார்த்திக் உள்ளிட்டோரை தேடி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை