அண்ணியை 20 முறை கத்தியால் குத்தி கொன்ற மைத்துனர் கைது
பெலகாவி : பெலகாவியில் சொத்து பிரச்னையில், அண்ணியை 20 முறை கத்தியால் குத்தி கொன்ற மைத்துனர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக நகர போலீஸ் கமிஷனர் பூஷன் போரசே நேற்று அளித்த பேட்டி: பெலகாவி மாவட்டம், திலக்வாடியின் மந்துபேட்டையை சேர்ந்தவர் ரஞ்சித் கவாலி. இவரது மனைவி கீதா கவாலி, 45. இவர்களுக்கு இரு பிள்ளைகள். ரஞ்சித் கவாலி சகோதரர் கணேஷ் கவாலி. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ரஞ்சித் உயிரிழந்தார். இந்த வீட்டின் மீது, கணேஷ் கவாலி, வங்கியில் 25 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். வாங்கிய வங்கி கடனை கட்டாமல் பணத்தை செலவழித்துவிட்டு சுற்றித்திரிந்தார். கடன் தொகை செலுத்தாததால், வீட்டை பறிமுதல் செய்ய வங்கி அதிகாரிகள் அங்கு வந்தனர். அப்போது அங்கிருந்த அண்ணி கீதாவிடம், வங்கி கடனை செலுத்தும்படி கணேஷ் கவாலி கூறினார். 'நானே வீட்டு செலவுக்காக வேலைக்கு சென்று வருகிறேன். என்னால் கடனை அடைக்க முடியாது' என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். அதன் பின், அண்ணிக்கும், கணேசுக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று காலை பணிக்கு செல்ல கீதா புறப்பட்டார். அங்கிருந்த கணேஷ், அண்ணியை 20க்கும் மேற்பட்ட முறை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டார். இதை பார்த்த அப்பகுதியினர், கீதாவை மீட்டு, பெலகாவி மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். தகவல் அறிந்த திலக்வாடி போலீசார் தப்பியோடிய கணேசை கண்டுபிடித்து கைது செய்தனர். கணேஷ் மீது, ஏற்கனவே பல்வேறு கிரிமினல் வழக்குகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.