உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கபிலா தீர்த்த நீர்வீழ்ச்சியில் நீராடலாமா?

 கபிலா தீர்த்த நீர்வீழ்ச்சியில் நீராடலாமா?

நீர் வீழ்ச்சி என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் விடுமுறை கிடைத்தால், நீர் வீழ்ச்சி எங்குள்ளது என, நகர்ப்புற மக்கள் தேடிச்செல்வது வழக்கம். கல்யாண கர்நாடகாவின் கொப்பால் மாவட்டத்தில் உள்ள கபிலத தீர்த்த நீர்வீழ்ச்சி பிரபலமானது. கொப்பால் மாவட்டம், குஷ்டகி தாலுகாவின் கப்பிரகா கிராமத்தில் கபிலா தீர்த்த நீர் வீழ்ச்சி உள்ளது. இது சுற்றுலா பயணியரை சுண்டி இழுக்கிறது. மலை மீதிருந்து கீழே விழும் நீரை பார்ப்பதே தனி சுகமாகும். இந்த நீர் வீழ்ச்சிக்கு புராதன பின்னணி உள்ளது. மஹாபாரத காலத்தில், கபில முனிவர் இந்த இடத்தில் தவம் புரிந்து, கங்கையை இங்கு அழைத்து வந்தார். இதனால் இங்கு நீர் வீழ்ச்சி ஏற்பட்டதாம். பெரும்பாலான நீர் வீழ்ச்சிகளை, துாரத்தில் இருந்து பார்த்து ஆனந்திக்கலாம். ஆழம் தெரியாது என்பதால், அருகில் செல்ல தயங்குவர். ஆனால் கபிலா தீர்த்த நீர் வீழ்ச்சியின் அடியில் பாறைக்கற்கள் சம நிலையில் இருப்பதால், பயமின்றி நீரில் இறங்கி குளிக்கலாம். 25 அடி உயரத்தில் இருந்து வீழும் நீரில் உடலை நனைத்து மகிழலாம். மழைக்காலத்தில் மட்டுமின்றி கோடைக்காலத்திலும் நீர்வீழ்ச்சியில் தண்ணீரை காணலாம். ஆனால், குறைவாக இருக்கும். சுற்றிலும் பசுமையான வனப்பகுதி, மலைகள் சூழ்ந்த இடத்தில் நீர் வீழ்ச்சி அமைந்துள்ளதால் வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் பெருமளவில் சுற்றுலா பயணியர் வருகின்றனர். இங்குள்ள அமைதியான சூழ்நிலையை ரசிக்கின்றனர். மூலிகை செடிகளை கடந்து வருவதால், நீர் வீழ்ச்சியில் குளித்தால், மனமும், உடலும் புத்துணர்ச்சி பெறும். கோடை விடுமுறையில் சுற்றுலா திட்டமிட்டால், கபிலா தீர்த்த நீர் வீழ்ச்சியையும், சுற்றுலா பட்டியலில் சேர்த்து கொள்ளுங்கள். இது சுற்றுலா தலம் மட்டுமின்றி, ஆன்மிக தலமாகவும் கருதப்படுகிறது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ